79/7-லிருந்து 172 ரன்கள் எடுத்தும், இங்கி.யின் 4 விக்கெட்டுகளை 14 ஒவர்களில் வீழ்த்தியும் தோல்வி: உலக சாம்பியன் வெற்றி 

79/7-லிருந்து 172 ரன்கள் எடுத்தும், இங்கி.யின் 4 விக்கெட்டுகளை 14 ஒவர்களில் வீழ்த்தியும் தோல்வி: உலக சாம்பியன் வெற்றி 
Updated on
2 min read

சவுத்தாம்ப்டனில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இங்கிலாந்து-அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ய பால்பர்னி தலைமை அயர்லாந்து அணி முதலில் பேட் செய்தது. ஆனால் டிஜே வில்லேயின் பவுலிங்கில் (5/30) படபடவென விக்கெட்டுகளை இழந்து 28/5 என்று சரிந்தது.

பால் ஸ்டர்லிங் (2), வில்லே பந்தை மிட்விக்கெட்டில் மோர்கனிடம் கேட்ச் கொடுத்தார். கேப்டன் பால்பர்னி (3), வில்லேயின் பந்து உடலுக்குக் குறுக்காகச் செல்ல எட்ஜ் செய்து விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ கேட்சுக்கு இரையானார்.

3வது ஓவரில் வில்லேயிடம் அயர்லாந்து விக்கெட் கொடுக்கவில்லை, ஆனால் 4வது ஓவரில் அதற்கு இழப்பீடாக 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் வில்லேவுக்கு வழங்கியது. 22 ரன்களில் நம்பிக்கை அளித்த கேரி டெலானி பேக்வர்ட் பாயிண்டில் கேட்ச் கொடுக்க, லொரான் டக்கர் (0), அடுத்த பந்தே ரிவியூவில் எல்.பி என தீர்ப்பளிக்கப்பட்டார். அறிமுக வீரர் டெக்டரும் டக்கில் ஆட்டமிழக்க இங்கிலாந்து 28/2 என்ற நிலையில் ரன் சேர்க்காமல் 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 28/5 என்று ஆனது.

வில்லே ஹாட்ரிக் வாய்ப்பைத் தடுத்த அறிமுக வீரர் கேம்ஃபர் பிரமாதமாக ஆடினார். 103 பந்துகளில் அரைசதம் கண்டு 118 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். அறிமுக வீரராக அயர்லாந்து வீரர் ஒருவர் அரைசதம் எடுப்பது 3வது முறையாகும். முதலில் இதே மோர்கன், பிறகு போத்தா ஆகியோர் அறிமுக அரைசதம் எடுத்துள்ளனர்.

கெவின் ஓ பிரையன் 22 ரன்களை எடுக்க இருவரும் அரைசதக் கூட்டணி அமைத்தனர். ஆண்டி மெக்பிரைன் 40 ரன்களுக்கு அபாரமாக ஆட அயர்லாந்து 79/7 என்ற நிலையிலிருந்து 44.4 ஓவர்களில் 172 ரன்களுக்குச் சுருண்டது.

173 ரன்கள் இலக்கை எதிர்த்து இறங்கிய இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பேர்ஸ்டோ 2 ரன்களுக்குச் சொதப்ப, ஜேம்ஸ் வின்ஸ் மட்டும் பிரமாதமான சில ஷாட்களுடன் 25 ரன்கள் எடுத்து எட்ஜ் ஆகி வெளியேற டாம் பாண்ட்டன் 11 ரன்களில் வெளியேற இங்கிலாந்து 14 ஒவர்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தாலும் 78 ரன்களை எடுத்திருந்தது.

ஆனால் அதன் பிறகு சாம் பில்லிங்ஸ் 67 நாட் அவுட், இயான் மோர்கன் 36 நாட் அவுட் என்று மேலும் விக்கெட்டுகள் விழாமல் வெற்றியை உறுதி செய்தனர். இங்கிலாந்து 27.5 ஒவர்களில் ஓவருக்கு 6.25 என்ற ரன் விகிதத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. சாம் பில்லிங்ஸ் 3வது ஒருநாள் சதம் எடுத்தார், இவர் இன்னின்ஸ்களில் சூப்பர் கட் ஷாட்கள், ரிவர்ஸ் ஸ்வீப்கள் அடங்கும். ஆட்ட நாயகனாக 5 விக்கெட்டுகள் வீழ்த்திய டேவிட் வில்லே தேர்வு செய்யப்பட்டார்.

சனிக்கிழமையன்று 2வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in