

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) வெளியிட்ட ஒருநாள் தரவரிசைக்கான பட்டியலில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் விராட் கோலி, ரோஹித் சர்மா அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருகின்றனர். பந்துவீச்சாளர்கள் வரிசையில் பும்ராவும், ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஒரு இந்திய வீரர் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.
கரோனா வைரஸ் பரவலால் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக எந்த அணியும் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் விளையாடவில்லை. இந்த காலக்கட்டத்தை அடிப்படையாக வைத்து ஐசிசி ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் தரவரிசைப்பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலி்ல் இந்திய அணியின் கேப்டன் விரோட் கோலி 871 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். 2-வது இடத்தில் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா 855 புள்ளிகளுடன் உள்ளார். இவர்கள் இருவரும் அசைக்க முடியாத இடத்தில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து இருந்து வருகின்றனர்.
மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம்829 புள்ளிகளுடனும், 4-வது இடத்தில் 818 புள்ளிகளுடன் நியூஸி வீரர் ராஸ் டெய்லர், 5-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் டூப்பிளசிஸ் 790 புள்ளிகளுடன் உள்ளனர்.
6 முதல் 10-ம் இடங்களில் முறையே, ஆஸி.யின் டேவிட் வார்னர்(789புள்ளிகள்), 7-வதுஇடத்தில் ஜோ ரூட்(770), 8-வது இடத்தில் ஆரோன் பிஞ்ச்(767), கேன் வில்லியம்ஸன்(765), டீ காக்(755) ஆகியோர் உள்ளனர்.
பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை முதலிடத்தில் நியூஸிலாந்து வீரர் டிரனட் போல்ட் 722 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் இந்திய வீரர் பும்ரா 719 புள்ளிகளுடன் உள்ளார். 3-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் முஜிபுர் ரஹ்மான்(701), 4-வது இடத்தில் பாட் கம்மின்ஸ்(689), 5-வது இடத்தில் ரபாடா(665) உள்ளனர்.
6 முதல் 10 இடங்களில் முறையே, கிறிஸ் வோக்ஸ், முகமது அமிர், மாட் ஹென்றி, ரஷித் கான், பெர்குசன் உள்ளனர்.
ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி 301 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பென் ஸ்டோக்ஸ்(293) 2-வது இடத்தில் உள்ளார். இந்த வரிசையில் இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா 246 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளார். 7-வது இடத்திலிருந்த ஜடேஜா 8-வது இடத்துக்கு சரிந்துள்ளார்.
ஐசிசி உலகக்கோப்பை சூப்பர் லீக் போட்டி வரும் 30-ம் தேதி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தொடங்குகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து வீரர்கள் ஜேஸன் ராய், விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ சிறப்பாகச் செயல்பட்டால் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.
தற்போது பேர்ஸ்டோ தரவரிசையில் 14-வது இடத்திலும், ராய் 11-வது இடத்திலும் உள்ளனர். இருவரும் சதம் அடித்தால், அரைசதம் அடித்தால் சிறப்பான தரவரிசையைப் பெறமுடியும். 2023-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு ஏற்கெனவே இங்கிலாந்து தகுதி பெற்றுவிட்ட நிலையில், அயர்லாந்துடன் நடக்கும் வழக்கமான ஒருநாள் தொடர் கரோனா வைரஸ் பரவல் காரணமாக அயர்லாந்துக்காக சூப்பர்லீக் தகுதிச்சுற்றாக மாற்றப்பட்டுள்ளது.