Published : 29 Jul 2020 07:59 AM
Last Updated : 29 Jul 2020 07:59 AM

பிராடின் 500வது விக்கெட்டுடன், ஹோல்டரின் தவறுகளுடன் தொடரை வென்றது இங்கிலாந்து 

0-1 என்ற இங்கிலாந்து பின்னடைவு கண்டதற்குக் காரணம் ஸ்டூவர்ட் பிராடை முதல் டெஸ்ட்டில் உட்கார வைத்தது, தொடரை இங்கிலாந்து 2-1 என்று வென்றதற்குக் காரணம் ஸ்டூவர் பிராட். இந்த முரணுடன் இங்கிலாந்து தொடரை வென்றாலும் மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டரின் இருபெரும் தவறுகளும் இங்கிலாந்தை வெற்றி பெறச் செய்துள்ளது.

விஸ்டன் ட்ராபியை இங்கிலாந்து கைப்பற்றியது, இனி இங்கி-மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடர்கள் ரிச்சர்ட்ஸ்- போத்தம் ட்ராபி என்றே அழைக்கப்படும். 2014-ல் இலங்கையிடன் 1-0 என்று தொடரை இழந்த பிறகு இங்கிலாந்து உள்நாட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோற்கவில்லை.

கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலும் டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்த மிகப்பெரிய தவறை இழைத்தார் ஜேசன் ஹோல்டர். ஆஸ்திரேலியாவின் ஒரே கொள்கை என்னவெனில் டாஸ் வின், முதலில் பேட்டிங், இதனால் என்ன நடந்தாலும் சரி, பிட்ச் பசுந்தரையாக இருந்தாலும் சரி அல்லது 125 ஆல் அவுட் ஆனாலும் சரி. இந்த ஒற்றைக்கொள்கை அவர்களுக்குப் பயனளித்தே வருகிறது.

399 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து மே.இ.தீவுகள் 129 ரன்களுக்குச் சுருண்டது, ஸ்டூவர் பிராட் 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் இந்த டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் ஆட்ட நாயகன் விருதையும் மே.இ.தீவுகள் வீரர் ராஸ்டன் சேஸ் உடன் தொடர் நாயகன் விருதையும் பகிர்ந்து கொண்டார். ஆனால் கிறிஸ் வோக்ஸ் 2வது இன்னிங்ஸில் பிரமாதமாக வீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது பற்றி பேச்சே இல்லை.

4வது நாள் ஆட்டம் மழையால் பாதிப்படைந்த நிலையில் நிச்சயம் மே.இ.தீவுகளுக்கு ட்ரா செய்ய ஒரு வாய்ப்பு இருந்தது. ஆனால் பிராட், வோக்ஸ் அதை அனுமதிக்கவில்லை.

10/2 என்ற நிலையில் இறங்கிய மே.இ.தீவுகள் முதலில் கிரெய்க் பிராத்வெய்ட்டை இழந்தது, தாழ்வாக வந்த பிராட் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறி பிராடின் 500வது விக்கெட்டாகவே வெளியேறினார்.

ஷேய் ஹோப் சில பிரமாதமான கிளாசிக் கவர் ட்ரைவ்களுடன் 6 பவுண்டரிகள் விளாசி 31 ரன்களில் வோக்ஸ் ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆடுகிறேன் பேர்வழி என்று கொடியேற்றினார். பிராட் இந்த கேட்சைப் பிடித்தார். ஷம்ரா புரூக்ஸ் 22 ரன்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் ஆடி இன்சைடு எட்ஜில் வோக்ஸ் பந்தில் பவுல்டு ஆனார்.

ராஸ்டன் சேஸ் 7 ரன்களில் ஆஃப் ஸ்பின்னர் டாம் பெஸ்ஸின் நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். பேக்வர்ட் பாயிண்டிலிருந்து நேரடியாக ஸ்டம்பைத் தாக்கியது. 87/6 என்று இருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது.

ஜேசன் ஹோல்டர் இன்கட்டரில் வோக்ஸ் பந்தில் எல்பி ஆகி வெளியேறினார், ரிவியூ பலனளிக்கவில்லை. ஷேன் டவ்ரிச், கார்ன் வால் இருவருமே எல்.பி. ஆகி வெளியேறினர். கடைசியில் ஜெர்மைன் பிளாக் உட் 23 ரன்களில் பிராடிடம் ஆட்டமிழந்தார். பிராட் 501 விக்கெட்டுகளுடன் முடித்திருக்கிறார்.. மேலும் தொடர்வார். 37.1 ஓவர்களில் 129 ரன்களுக்கு சுருண்டு 269 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் தோல்வி அடைந்தது.

அடுத்ததாக ஆகஸ்ட் 5ம் தேதியன்று இங்கிலாந்து-பாகிஸ்தான் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. நாளை இங்கிலாந்து- அயர்லாந்து ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x