இளம் அணிக்கு அற்புத வெற்றி: கோலி நெகிழ்ச்சியும் சில புள்ளிவிவரமும்
இலங்கைக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இலங்கைக்கு எதிரான தொடரை வென்ற மகிழ்ச்சியில் இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:
22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி இங்கு டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியிருக்கிறது. இது இளம் இந்திய அணிக்கு கிடைத்த அற்புதமான வெற்றி. இலங்கை மண்ணில் இதற்கு முன்னர் முதல் டெஸ்ட்டில் தோற்றபிறகு இந்திய அணி தொடரை வென்றது கிடையாது. ஆனால் நாங்கள் முதல் டெஸ்ட்டில் தோற்றபோதும், அதிலிருந்து மீண்டு இப்போது தொடரைக் கைப்பற்றியதன் மூலம் வரலாறு படைத்திருக்கிறோம் என்றார்.
இந்த வெற்றிக்கு டிரெஸ்ஸிங் அறையில் நிலவிய அற்புதமான சூழலே காரணம் எனக் கூறிய கோலி, "புவனேஸ்வர் குமார், வருண் ஆரோன் போன்றோர் கடைசி இரு போட்டிகளில் விளையாடாதபோதும், வெளியில் இருந்து எங்களுக்கு உதவினார்கள். ஒவ்வொருவரும் வெற்றிக்காக பாடுபட்டார்கள். இந்த வெற்றி எங்களுடைய டெஸ்ட் வாழ்க்கையை கட்டமைக்க உதவும்" என்றார்.
இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்ட சேதேஷ்வர் புஜாராவை வெகுவாகப் பாரட்டிய கோலி, "முரளி விஜய் காயமடைந்ததால் புஜாரா களமிறங்கினார். ஆனால் புஜாரா அதை கடினமானதாக பார்க்காமல், தனக்கு கிடைத்த வாய்ப்பாக பார்த்தார். அதனால்தான் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற முடிந்தது" என்றார்.
மேத்யூஸ் ஏமாற்றம்
தோல்வி குறித்துப் பேசிய இலங்கை கேப்டன் மேத்யூஸ், "டாஸ் வென்று இக்கட்டான சூழலில் இந்திய அணியை முதலில் பேட் செய்ய வைத்தபோதும் நாங்கள் தோற்றிருப்பது ஏமாற்றமளிக்கிறது. எங்களுடைய பேட்டிங் முற்றிலும் தோல்வியடைந்தது. அதேநேரத்தில் பவுலர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டனர்.
முதல் இன்னிங்ஸ் மிக முக்கியமானது. அதில் நாங்கள் 300 ரன்கள் வரை குவிக்க வேண்டியதிருந்தது. நானும், பெரேராவும் நீண்ட நேரம் நிற்கலாம் என நினைத்தேன். அப்படி நின்றிருந்தால் அது ஆட்டத்தின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள்" என்றார்.
நல்ல வாய்ப்பு: புஜாரா
ஆட்டநாயகன் விருது வென்ற புஜாரா பேசுகையில், "எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு இது. ஒரு கட்டத்தில் 1-1 என சமநிலையில் இருந்த நாங்கள், இப்போது தொடரை வென்றுள்ளோம். புதிய பந்துகளை எதிர்கொள்ளும்போது சவாலாக இருந்தது. சிறப்பாக தயாராகியிருந்ததும், சர்வதேச போட்டியின் மூலம் எனக்கு கிடைத்த அனுபவமும் இந்தப் போட்டியில் நான் சிறப்பாக ஆடுவதற்கு உதவின" என்றார்.
இஷாந்த் சர்மா 200 விக்கெட்
இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தினார் இஷாந்த் சர்மா. இவர் தனது 65-வது போட்டியில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 4-வது நபர் இஷாந்த் சர்மா. கபில்தேவ் (434), நாத் (236), ஜாகீர்கான் (311) ஆகியோர் மற்ற 3 வேகப்பந்து வீச்சாளர்கள் ஆவர்.
மேத்யூஸ் 339 ரன்கள்
இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் இலங்கை கேப்டன் மேத்யூஸ் 339 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். தினேஷ் சன்டிமல் 288 ரன்களுடன் 2-வது இடத்தையும், விராட் கோலி 233 ரன்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
அஸ்வின் 21 விக்கெட்
இந்தத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் 21 விக்கெட்டுகளுடன் அஸ்வின் முதலிடத்தைப் பிடித்தார். அவருக்கு அடுத்தபடியாக அமித் மிஸ்ரா, தமிகா பிரசாத், ரங்கனா ஹெராத் ஆகியோர் தலா 15 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
