

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) தலைவர் பதவிக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிதான் பொருத்தமானவராக இருப்பார். அவரின் கூர்மையான கிரிக்கெட் அறிவும், பரந்த அனுபவமும் அதற்கு சாட்சி என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கரா ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஐசிசி தலைவராக சவுரவ் கங்குலி வர வேண்டும் என்று ஏற்கெனவே தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் ஆதரவு தெரிவித்த நிலையில், இப்போது சங்கக்கராவும் ஆதரவுக் குரல் உயர்த்தியுள்ளார்.
ஐசிசி தலைவராக இருந்த ஷசாங் மனோகர் கடந்த மாதம் ராஜினாமா செய்தார். இதனால் இடைக்காலத் தலைவராக ஹாங்காங்கைச் சேர்ந்த இம்ரான் கமாஜா கவனித்து வருகிறார். இன்னும் ஐசிசி தலைவர்பதவிக்கு தேர்தல் நடத்தாத சூழலில் வேட்பாளராக யாரைக் கொண்டுவருவது தொடர்பாக கிரிக்கெட் உலகில் பெரும் விவாதம் ஓடத் தொடங்கியுள்ளது.
இந்தியா டுடே இதழின் நிகழ்ச்சி ஒன்றில் காணொலி வாயிலாக இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும் எம்சிசி தலைவருமான குமார் சங்கக்கரா பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
நான், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் மிகப்பெரிய ரசிகன் என்பதை இங்கு கூறுகிறேன். ஐசிசி தலைவர் பதவிக்கு என்னைப் பொறுத்தவரை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிதான் பொருத்தமானவராக இருப்பார். அவரின் பாரபட்சமில்லாத செயல்பாடு, கிரிக்கெட்டின் நலனுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைப் போல் யாரும் அளிக்க முடியாது.
ஐசிசி தலைவராக கங்குலி பதவி ஏற்றால், கிரிக்கெட்டில் நிச்சயம் ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழும். கங்குலிக்கு இருக்கும் கூர்மையான கிரிக்கெட் அறிவும், கிரிக்கெட்டில் பரந்த அனுபமும் அவர்தான் இந்தபதவிக்கு பொருத்தமானவர் என்பதைக் கூறுகிறது.
கங்குலிக்கு மனதில் கிரிக்கெட்டின் அதிகமான நலனில் குறித்த இடம் உண்டு. பிசிசிஐ தலைவராகவோ, இங்கிலாந்து கிரிக்கெட் சங்கத் தலைவராகவோ, இலங்கை வாரியத்தின் தலைவராகவோ அல்லது எந்த நாட்டு கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருந்தாலும், ஐசிசி தலைவராக இருந்தாலும் கிரிக்கெட் நலன் எனும் விஷயம் மாறக்கூடாது.
ஐசிசி தலைவராக வரும்போது முற்றிலும் சர்வதேச மனநிலையோடு அணுகவேண்டும். நாம் எங்கிருந்து வந்திருக்கிறோம், ஆசியாவிலிருந்து வந்துள்ளோமோ, இலங்கை, இந்தியாவிலிருந்து வந்துள்ளதால் அண்டை நாடுகளுக்கு பாரபட்சம் காட்டுவதோ, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு ஆதரவாக இருப்பதோ கூடாது.
நான் ஒரு கிரிக்கெட் வீரர், கிரிக்கெட்டின் நலனுக்கும், கிரிக்கெட் விளையாடும் அணிகளின் நலனுக்கு என்ன தேவையோ அதை செய்வேன் எனப் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த திறமை அனைத்தும் சவுரவ் கங்குலியிடம் இருக்கிறது. நாடுகளுக்கு இடையே, அணிகளுக்கு இடையே நல்ல நட்புறவை வளர்க்கும் திறமை இருக்கிறது. அது அவரை ஐசிசி தலைவர் பதவிக்கு உயர்த்தும்.
பிசிசிஐ தலைவராக கங்குலி வருவதற்கு முன்பு இருந்தே கங்குலியின் செயல்பாடுகளை கவனித்து இருக்கிறேன். நிர்வாகப் பதவிகள், பயிற்சியாளராக கங்குலி இருந்தபோது அவரைப் பார்த்திருக்கிறேன்.
எம்சிசி உறுப்பினராக கங்குலி இருந்தபோது, வீரர்களுக்கு இடையே நட்புறவ எவ்வாறு வளர்த்தார், உலகளவில் வீரர்களிடையே பழகுதலில் எவ்வாறு முன்னேற்றத்தை ஏற்படுத்தினார் என்பதை கவனத்திருக்கிறேன்.
இவ்வாறு சங்கக்கரா தெரிவித்தார்.