Published : 26 Jul 2020 08:37 AM
Last Updated : 26 Jul 2020 08:37 AM

ஸ்டூவர்ட் பிராட் காட்டடி அரைசதம்; பவுலிங்கிலும் அபாரம்: ஃபாலோ ஆனைத் தவிர்க்க மே.இ.தீவுகள் போராட்டம்

ஓல்ட் ட்ராபர்டில் நடைபெறும் 3வது டெஸ்ட் போட்டியில் கடைசியில் இறங்கிய ஸ்டூவர்ட் பிராட் அடித்த காட்டடி அரைசதத்தினால் இங்கிலாந்து அணி தன் முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்தது.

பிறகு பிரமாதமான ஒரு ஸ்விங் பவுலிங்கில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் பிராட். 2ம் நாள் ஆட்ட முடிவில் மே.இ.தீவுகள் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்து ஃபாலோ அனைத் தவிர்க்க இன்னும் 33 ரன்கள் தேவை என்ற நிலையில் தடுமாறி வருகிறது.

கேப்டன் ஹோல்டர் 24 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் டவ்ரிச் 10 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.

இங்கிலாந்து 258/4 என்று வலுவாகத் தொடங்கிய நிலையிலும் மே.இ.தீவுகளின் அபாரமான புதிய பந்தில் வீசிய பவுலிங்கிற்குத் தாக்குப் பிடிக்க முடியவில்லை, ஆலி போப் சதம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர் 91 ரன்களில் கேப்ரியலின் ஆக்ரோஷத்துக்கு பெவிலியன் திரும்பினார், ஸ்டம்ப் பெயர்ந்தது.

ஜோஸ் பட்லரும் 67 ரன்களில் கேப்ரியல் பந்தை ஹோல்டரிடம் எட்ஜ் செய்தார். கேப்ரியலின் அருமையான ஸ்பெல்லாக இது அமைந்தது. கிறிஸ் வோக்ஸ், கிமார் ரோச் பந்தை மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டதில் ரோச்சின் 200வது டெஸ்ட் விக்கெட்டாக முடிந்தார்.

ஜோப்ரா ஆர்ச்சர் 3 ரன்களில் ஹோல்டரின் கேட்சுக்கு இரையாகி ரோச்சின் 201வது விக்கெட்டாக வெளியேறினார். 280/8 என்று ஆனது இங்கிலாந்து ஆனால் இங்கிருந்து மே.இ.தீவுகள் கோட்டை விட்டது. பிராட் இறங்கி விளாசித்தள்ளினார். இறங்கியவுடனேயே தன் நோக்கத்தைத் தெளிவு படுத்திய பிராட், கிமார் ரோச் வீசிய பந்தை மிட்விக்கெட் மீது சிக்ஸர் அடித்தார், மேலும் ஷாட்கள் அவர் மட்டையிலிருந்து வந்த வண்ணம் இருந்தன.

கேப்ரியல் பந்து கவர் திசையில் பறந்தன, ஹோல்டரை நேராக தூக்கி அடித்தார் பிராட், 33 பந்துகளில் அரைசதம் கண்ட பிராட், லாம்ப், போத்தமுக்குப் பிறகு குறைந்த பந்தில் டெஸ்ட் அரைசதம் கண்ட மூன்றாவது இங்கிலாந்து வீரர் ஆனார்.

டாம் பெஸ் உடன் சேர்ந்து 9வது விக்கெட்டுக்காக 76 ரன்கள் சேர்த்தனர். கடைசியில் 45 பந்துகளில் 9 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்து சேஸ் பந்தில் ஆட்டமிழக்க, ஆண்டர்சன் 11, பெஸ் 18 என்று ரன்கள் எடுக்க இங்கிலாந்து 369 ரன்களுக்குச் சுருண்டது.

மே.இ.தீவுகள் தரப்பில் கிமார் ரோச் 4 விக்கெட்டுகளையும் கேப்ரியல், சேஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற, ஹோல்டர் 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

அதிரடி இன்னிங்ஸை முடித்த ஸ்டூவர்ட் பிராட் பிறகு பந்தைக் கையில் எடுத்து ஆக்ரோஷம் காட்டினார், முதல் ஓவரிலேயே பிராத்வெய்ட் (1) மட்டை விளிம்பைப் பிடிக்க ஜோ ரூட் கேட்ச் எடுத்தார். ஆண்டர்சன் பந்தில் ஜான் கேம்பல் எட்ஜ் செய்ய பென் ஸ்டோக்ஸ் கேட்சை விட்டார்.

இதனையடுத்து சில பிரமாதமான ஷாட்களை ஆடிய கேம்பெல் 32 ரன்கள் எடுத்தார், ஆனால் அதை பெரிய ஸ்கோராக அவரால் கட்டமைக்க முடியவில்லை. ஆர்ச்சர் இவருக்கு ஃபுல் லெந்த் பந்தாக வீசிவிட்டு ஒரு அதிர்ச்சி பவுன்சரை வீச மட்டையில் பந்து தானாக பட்டு கல்லியில் பர்ன்ஸ் கையில் போய் உட்கார்ந்தது.

ஷேய் ஹோப் 17 ரன்களில் ‘டிபிகல்’ ஆண்டர்சன் லேட் ஸ்விங்குக்கு ஆட்டமிழந்தார், பந்து காற்றில் உள்ளே வந்து பிறகு வெளியே ஸ்விங் ஆனது. எட்ஜ்தான் வேறு வழியில்லை. புரூக்ஸ் 2 ரன்களில் ஆண்டர்சன் பந்தில் மட்டை உள்விளிம்பில் பட்டு பட்லரிடம் கேட்ச் ஆனார்.

ராஸ்டன் சேஸ் 9 ரன்களில் பிராட் பந்தில் பிளம்ப் எல்.பி.ஆனார். பிளாக்வுட் 26 ரன்கள் எடுத்து நன்றாக அப்போது ஆடிவந்தார், சூப்பர் ஸ்ட்ரெட்ய் ட்ரைவ் பவுண்டரி மூலம் மே.இ.தீவுகளின் 100 ரன்களைக் கொண்டு வந்தார். அதிக ஷாட்களை ஆட முயன்றார், இதனால் வோக்ஸ் ஒரு பந்தை உள்ளே கொண்டு வர பவுல்டு ஆனார் பிளாக்வுட்.

ஆட்ட முடிவில் டவ்ரிச் 10 ரன்களுடனும் கேப்டன் ஹோல்டர் 24 ரன்களுடனும் களத்தில் இருக்க மே.இ.தீவுகள் 137/6 என்று தடுமாறி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x