

ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த உலகக்கோப்பை டி20 போட்டிகள் ‘கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது’, அதன் சாளரத்தில் தற்போது செப்.19 முதல் ஐபிஎல் 2020 போட்டிகள் நடைபெறுகின்றன.
இங்கிலாந்தில் கிரிக்கெட் தொடங்கி ஆடப்பட்டு வருகிறது, அடுத்து ஆஸ்திரேலியாவும் ஆடவுள்ளது, இந்நிலையில் இந்திய அணி யின் அனைத்து தொடர்களையும் ரத்து செய்து விட்டு ஐபிஎல் தொடரை மட்டும் நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டிலும் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.
ஆனால் யு.ஏ.இ.யில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடர் பற்றி முன்னாள் வீரரும் பாஜக எம்.பியுமான கம்பீர் கூறுவதாவது:
ஐபிஎல் எங்கு நடக்கிறது என்பது முக்கியமல்ல, நடக்கிறது என்பதுதான் முக்கியம். அதே வேளையில் யு.ஏ.இ.யில் நடப்பதும் சிறந்ததுதான்.
டெஸ்ட், ஒருநாள், டி20 என்று 3 வகையான போட்டிகளையும் நடத்த இங்கு மைதானங்கள் உள்ளன. வரும் ஐபிஎல் தொடரால் ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் மனநிலையும் மாறப்போகிறது.
முந்தைய ஐபிஎல் தொடர்களை விட இந்த இக்கட்டான நேரத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடர் மிகச்சிறந்ததாகப் போகிறது, ஏனெனில் இது தேசத்திற்காக நடைபெறுகிறது., என்றார் கம்பீர்.
ஐபிஎல் தொடரைக் கைவிட்டால் பிசிசிஐ-க்கு 4000 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்படும், ஒளிபரப்பு உரிமை பெற்றவர்கள் கடும் நஷ்டம் அடையக்கூடும் என்று எப்படியாவது இதனை நடத்த பிசிசிஐ ஒற்றைக்காலில் நின்று சாதித்துள்ளது, இதை தேசத்துக்கானது என்கிறார் கவுதம் கம்பீர்.