டெஸ்ட் போட்டியை ட்ரா செய்வது எனக்குப் பிடிக்காது, முடிவு தெரிவதில் சமரசம் இல்லை: விராட் கோலி திட்டவட்டம்

டெஸ்ட் போட்டியை ட்ரா செய்வது எனக்குப் பிடிக்காது, முடிவு தெரிவதில் சமரசம் இல்லை: விராட் கோலி திட்டவட்டம்
Updated on
1 min read

இந்திய டெஸ்ட் தொடக்க வீரர் மயங்க் அகர்வாலுடன் ’ஓபன் நெட்ஸ் வித் மயங்க்’ என்ற நிகழ்ச்சிக்காக கேப்டன் விராட் கோலி உரையாடினார்.

அதில் டெஸ்ட் போட்டிக்கான தன் அணுகுமுறை குறித்து விளக்கியதாவது:

டெஸ்ட் போட்டியின் எந்த சூழ்நிலையிலும் வெற்றியா தோல்வியா என்ற முடிவு தெரிவதில் நான் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.

எனவே கடைசி நாளில் 300 ரன்களுக்கும் மேல் விரட்ட வேண்டும் என்றால் அணுகுமுறை என்னவாக இருக்கும் என்றால், இலக்கை நோக்கி அடித்து ஆடுவதாகத்தான் இருக்குமே தவிர ட்ரா செய்வதாக இருக்காது.

சக வீரர்களிடமும் அதையேதான் கூறுவேன், இலக்கை நோக்கி அடித்து ஆடுவோம். 300 ரன்கள் என்றால் ஒருசெஷனுக்கு 100 ரன்கள், முதல் செஷனில் 80 ரன்கள் ஒன்று அல்லது 2 விக்கெட்டுகளை இழந்திருந்தால் கூட நடு செஷனில் களத்தில் இருக்கும் இரண்டு வீரர்கள் பொறுப்பைக் கையில் எடுத்து கொண்டு எதிராளி பவுலிங்கை ஆதிக்கம் செலுத்தி ஆடுவதுதான் சரி.

இரண்டாவது செஷனில் 100 ரன்கள் எடுத்திருக்கிறோம் என்றால் கடைசி செஷனில் 120 ரன்கள் தேவையாக இருக்கும். விக்கெட்டுகள் கையில் இருக்கிறது, உதாரணமாக 7 விக்கெட்டுகள் கையில் இருக்கிறது என்றால் ஒருநாள் போட்டி போல் அதை எடுக்கவே முயற்சி செய்வோம்.

எனவே சூழ்நிலை மிக மோசமாகப் போனால் மட்டுமே தோல்வியைத் தவிர்ப்பதற்காகவே ட்ராவுக்கு ஆடுவேன். கடைசி நேரத்தில் போட்டியைக் காப்பாற்ற ட்ராவுக்கு ஆடுவேனே தவிர மற்றபடி வெற்றி இலக்கை நோக்கி அடித்து ஆடுவதுதான் என் அணுகுமுறையாக இருக்கும்.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in