Published : 25 Jul 2020 08:12 AM
Last Updated : 25 Jul 2020 08:12 AM

சரிவிலிருந்து மீட்ட  போப், பட்லர்: 122/4 என்ற நிலையில் இங்கி. மீதான பிடியை நழுவ விட்ட மே.இ.தீவுகள்

ஆலி போப், ஜோஸ் பட்லர்.

மான்செஸ்டரில் நடைபெறும் 3வது இறுதி டெஸ்ட் போட்டி இரு அணிகளும் 1-1 என்று சமநிலை வகித்துவரும் நிலையில் முக்கியத்துவமான டெஸ்ட் போட்டியாகும்.

முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து சொதப்பிய நேரத்தில் ஆலி போப் 91, ஜோஸ் பட்லர் 56 என்று 5வது விக்கெட்டுக்காக 136 ரன்களைச் சேர்க்க முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்ற ஜேசன் ஹோல்டர் முதலில் இங்கிலாந்தை களமிறக்கினார். இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 47/2 பிறகு 92/3 என்று உதிரும் நிலையில் இருந்தது. பிராட், ஆண்டர்சன், ஆர்ச்சர் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களை அணியில் கொண்டு வருவதற்காக கிராலி என்ற பேட்ஸ்மெனை இங்கிலாந்து அணி தியாகம் செய்ய வேண்டியிருந்தது. இந்நிலையில் தொடக்க வீரர் ரோரி பர்ன்சின் 57 ரன்கள் நல்ல பங்களிப்பே.

கடந்த போட்டியில் சதம் எடுத்த சிப்லி இந்தப் போட்டியில் டக் அவுட் ஆனார், கிமார் ரோச்சின் முதல் ஓவர் கடைசி பந்தில் ஒரு இன்ஸ்விங்கருக்கு காலை நகர்த்த மாட்டேன் என்று அடம்பிடித்து ஆட எல்.பி.ஆகி வெளியேறினார். ஜோ ரூட் 59பந்துகள் ஆடி 17 ரன்களுக்கு ஒரு பவுண்டரி கூட இல்லாமல், சரளமாக ஆட முடியாமல் கடைசியில் பர்ன்ஸ் ஒரு பந்தை ஆஃப் திசையில் திருப்பி விட ஒரு விரைவு கதி சிங்கிள் எடுக்கலாம் என்று ரன்னர் ஜோ ரூட் ஓடி வர சேஸின் த்ரோ நேராக பைல்களைப் பதம் பார்க்க ரன் அவுட் ஆனார்.

பென் ஸ்டோக்ஸ் என்ற அபாய வீரர் 2 பவுண்டரிகளுடன் 20 ரன்களில் ஆடி வந்த போது கிமார் ரோச்சின் அதியற்புத பந்து ஒன்றில் பென் ஸ்டோக்ஸ் பவுல்டு ஆனார். பந்து தையலில் பட்டு உள்ளே வர ஸ்டோக்ஸின் மட்டையைக் கடந்து சென்று ஸ்டம்பைத் தாக்கிய விதம் ஸ்டோக்ஸுக்கே ஆச்சரியமான ஒரு டெலிவரியாக அமைந்தது.

92/3 என்ற நிலையிலிருந்து ஆலி போப், ரோரி பர்ன்ஸ் ஸ்கோரை 122 ரன்களுக்கு உயர்த்தினர். அப்போது 57 ரன்களில் இருந்த பர்ன்ஸ், ராஸ்டன் சேஸ் பந்தை கட் செய்ய முயன்று ஸ்லிப்பில் கார்ன்வாலின் அற்புதமான கேட்சுக்கு வெளியேற இங்கிலாந்து 122/4 என்று சரியும் அபாயத்துக்கு வந்தது.

ஜோஸ் பட்லர் இங்கிலாந்து அணியில் நீடிப்பது கடினம் என்ற நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் ஆடுகிறார். 12 டெஸ்ட் போட்டிகளில் இவரது சராசரி 21.26 தான். இந்தத் தொடரில் 35, 9, 40, 0, என்ற ஸ்கோர்களை பட்லர் எடுத்துள்ளார், இந்நிலையில் அவர் 120 பந்துகளில் 5பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 56 எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

ஆலி போப் 30 ரன்களில் இருந்த போது ஷனன் கேப்ரியல் பந்தில் பிழைத்தார், கேட்சை விட்டது ராஸ்டன் சேஸ். பிறகு ஒரு எல்.பி.தீர்ப்பு ஆலி போப்பிற்குச் சாதகமாகச் சென்றது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கவர் பவுண்டரிக்கு பந்தை விரட்டி அரைசதம் எடுத்தார் ஆலி போப்.

பட்லர், பெரிய உடல்வாகு கொண்ட ஸ்பின்னர் கார்ன்வால் ஓவரில் இரண்டு சிக்சர்களை விளாசி தன் அதிரடி பாணிக்குத் திரும்பினார். பட்லர் 104 பந்துகளில் தனது 16வது டெஸ்ட் அரைசதத்தை எடுத்தார்.

மேஇ.தீவுகள் புதிய பந்தை எடுத்த போது கிமார் ரோச் பந்து பட்லர் மட்டை விளிம்பில் பட்டு கேட்ச் ஆகச் சென்றது ஆனால் பீல்டருக்குத் தள்ளி சென்றது.

ஆட்ட முடிவில் ஆலி போப் 91 ரன்களுடனும் பட்லர் 56 ரன்களுடனும் கிரீசில் இருக்கின்றனர். மே.இ. தீவுகள் தரப்பில் கிமார் ரோஸ் பிரமாதமாக வீசினார், ஷனன் கேப்ரியல் அபாரமாக வீசினாலும் காயத்தினால் கொஞ்சம் அவதியுற்றார். ஜேசன் ஹோல்டர் வழக்கம் போல் நன்றாக வீசினார். ஸ்பின்னர் கார்ன்வால் எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை அவர் 21 ஓவர்களில் 71 ரன்களை விட்டுக் கொடுத்தார். சேஸ் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

இன்று ஆட்டம் மழையால் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x