

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலப்பு தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற பஹ்ரைன் அணி ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து, அந்த போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படுவதாக நேற்று சர்வதேச தடகள அமைப்பு அறிவித்தது.
பஹ்ரைன் அணியில் ஓடிய கெமி அடிகோயா எனும் வீராங்கனை ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்தார். இதையடுத்து, அந்த அணியின் ஒட்டுமொத்த தங்கப்பதக்கமும் பறிக்கப்பட்டது, கெமி அடிகோயாவுக்கு 4 ஆண்டுகள் தடையும் விதித்து தடகள நம்பிக்கை அமைப்பு(ஏஐயு) நேற்று அறிவித்தது.
இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் கடந்த 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப்போட்டிகள் நடந்தன. இதில் 400 மீட்டர் கலப்பு ஓட்டத்தில் இந்திய அணி சார்பில் முகமது அனாஸ், பூவம்மா, ஹிமா தாஸ், ஆரோக்கிய ராஜீவ் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தப் போட்டியில் இந்திய அணி 3நிமிடங்கள் 15 வினாடிகளில் எல்லையை அடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றது. பஹ்ரைன் அணி 3நிமிடங்கள் 11 நிமிடங்களில் வந்து தங்கம் வென்றது.
இதில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் ஓடும் போது அவருக்கு வழிவிடாமல் பஹ்ரான் வீராங்கனை இடையூறு செய்தார் என்று இந்தியா சார்பில் அப்போது போட்டி நிர்வாகத்திடம் புகார் எழுப்பப்பட்டது. ஆனால், அந்த புகார் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் பஹ்ரைன் வீராங்கனை கெமி அடிகோயாவுக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில் அவர் ஊக்கமருந்து எடுத்துக்கொண்டு போட்டியில் ஓடியது அவரின் ஏ, பி மாதிரியில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடையும், அந்த அணி பெற்ற தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டது.
2-வது இடம் பெற்ற இந்திய அணிக்கு தங்கப்பதக்கத்துடன் முதலிடமும், மூன்றாவது இடம் பெற்றிருந்த கஜகஸ்தான் வெள்ளியும் வழங்கப்படுவதாக ஆசிய விளையாட்டுப் போட்டி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதில் 400 மீட்டர் மகளிருக்கான தடை ஓட்டத்தில் இந்திய வீாரங்கனை அனு ராகவன் 4-வது இடத்தைப் பெற்றிருந்தார். ஆனால், இந்த போட்டியில் பங்கேற்றிருந்த பஹ்ரைன் வீராங்கனை அடிகேயா தங்கம் வென்றிருந்தபோதிலும் ஊக்கமருந்து சோதனையில் அவரின் பதக்கம் பறிக்கப்பட்டது.
இதனால் 4-வது இடத்தில் இருந்த இந்திய வீராங்கனை அனு ராகவன்(59:92) மூன்றாவது இடத்துக்கு உயர்த்தப்பட்டு, அவருக்கு வெண்கலப்பதக்கம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து இந்திய தடகள கூட்டமைப்பின் தலைவர் அடில் சுமரிவாலா நிருபர்களிடம் கூறுகையில் “ உலக தடகள இணையதளத்தில் 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப்போட்டியில் 400 மீட்டர் கலப்பு இரட்டையர் ஓட்டத்தில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.
அதேபோல அனு ராகவனும் வெண்கலம் வென்றதாக அறிவிக்கப்பட்டது கூடுதல் மனநிறைவாகும்.
இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 8 தங்கம், 9 வெள்ளி உள்பட 20 பதக்கங்களாக உயர்ந்துள்ளது. இந்த செய்தி பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு மேலும் ஊக்கத்தை அளித்து டோக்கியாவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு வீரியமாகத் தயாராக வைக்கும்” எனத் தெரிவித்தார்