என் பயிற்சிக் காலம் இன்னும் கொஞ்சம் சிறப்பாக முடிந்திருக்கலாம்: அனில் கும்ப்ளே வருத்தம்

என் பயிற்சிக் காலம் இன்னும் கொஞ்சம் சிறப்பாக முடிந்திருக்கலாம்: அனில் கும்ப்ளே வருத்தம்
Updated on
1 min read

அனில் கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக ஓராண்டு இருந்தார். விராட் கோலிக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் முற்ற கடைசியில் அனில் கும்ப்ளே தன் பயிற்சியாளர் பொறுப்பைத் துறந்தார்.

விராட் கோலிக்கும் இவருக்கும் இடையே என்ன தகராறு என்பது இன்று வரை ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. விராட் கோலி அணியில் நம்பர் 2-ஐ வளர்த்து விட விரும்பாத தருணம் அது. அப்போது ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் கோலி காயத்துடன் ஆடுவேன் என்று அடம்பிடித்ததாக செய்திகள் எழுந்தன. பயிற்சியாளர் கும்ப்ளே அதை விரும்பவில்லை. அதனால் ரஹானேவை கேப்டனாக்கி ஆடச் செய்தார்.

இது தொடர்பாக இருவருக்கும் இடையே வேறுபாடு வளர்ந்து முற்றியது. இதனையடுத்து அப்போதைய கிரிக்கெட் கமிட்டி தலைமைக்கு தினமும் கும்ப்ளேவை பற்றி புகார் எழுப்பியவண்ணம் இருந்தார் விராட் கோலி. இதனையடுத்து பெருந்தன்மையாக விஷயத்தை ஊதிப்பெருக்காமல், ஒரு ஜெண்டில்மேனாக கும்ப்ளே தானாகவே பயிற்சியாளர் பொறுப்பை ராஜினாமா செய்தார்.

இது தொடர்பாக, இன்ஸ்டாகிராம் லைவ் செஷனில் மபமெல்லோ மபாங்வாவுடன் பேசிய அனில் கும்ப்ளே, “இந்திய அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பு ஏற்றுக் கொண்டமட்டில் எனக்கு மகிழ்ச்சிதான். அணியுடன் நான் செலவிட்ட அந்த ஓராண்டு பிரமாதமாக இருந்தது.

பிரமாதமாக ஆடும் வீரர்களுடன் மீண்டும் ஓய்வறையைப் பகிர்ந்து கொண்டது ஒரு நல்ல உணர்வை ஏற்படுத்தியது.

அந்த ஓராண்டில் உண்மையில் நன்றாக ஆடினோம். என்னால் இயன்ற பங்களிப்பைச் செய்ய முடிந்தது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. வருத்தம் ஏதுமில்லை. அங்கிருந்தும் நகர வேண்டியதைப் பற்றி எனக்கு ஏமாற்றம் ஏதுமில்லை.

என்ன! முடிவு கொஞ்சம் நன்றாக அமைந்திருக்கலாம் என்று எனக்கு தெரிந்தது. ஒரு பயிற்சியாளராக அங்கிருந்து நகர வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தேன். பயிற்சியாளர்தான் நகர வேண்டும். அந்த ஓராண்டில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு செய்ததில் எனக்கு உண்மையில் மகிழ்ச்சியே.” என்றார் கும்ப்ளே.

ஓய்வு பெறும்போது, விராட் கோலியுடன் உறவு இனி சாத்தியமில்லை என்று கூறியிருந்தார் கும்ப்ளே. ஆனால் இன்று வரை என்ன நடந்தது என்பது பற்றி ஒருவரும் வாயைத்திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in