

வங்காள கிரிக்கெட் சங்கத் தலைவராக முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டார். மறைந்த ஜக்மோகன் டால்மியாவின் மகன் அவிஷேக் டால்மியா இணைச் செயலராக நியமிக்கப்பட்டார்.
மாநில தலைமைச் செயலகத்தில் வங்காள கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், மாநில அமைச்சர்கள் முன்னிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி இதனை அறிவித்தார்.
மம்தா பானர்ஜி கூறும்போது, “டால்மியாவின் துரதிர்ஷ்டவசமான மரணத்துக்குப் பிறகு பெரிய நெருக்கடி ஏற்பட்டது. யாராவது ஒருவர் கிரிக்கெட் சங்கத்தை தலைமை ஏற்று நடத்த வேண்டும், டால்மியா கிரிக்கெட்டை அதிகமும் நேசித்தார். எனவே அவருக்கு நெருக்கமானவர் ஒருவர் வாரியத்த்தை தலைமையேற்று நடத்த வேண்டும். கிரிக்கெட் குடும்பம் முக்கியமானது. நான் உங்களிடமிருந்து விரும்புவதெல்லாம், ஜக்மோகன் டால்மியாவின் வழிமுறைகளை ஒற்றுமையுடன் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே” என்றார்.
அவர் மேலும் கூறும்போது, “நான் தலையிடுவது நியாயமாகாது. நான் அவர்கள் சிறப்பாக செயல் படவேண்டும் என்று விரும்புகிறேன். நான் அவர்களுடன் ஒரு உதவியாளர் என்ற அளவில் இருப்பேன். இதைத்தான் அவர்கள் அனைவரும் முடிவெடுத்தனர்.
நான் இதனை அறிவித்திருக்கக் கூடாதுதான், ஆனால் வாரியத்தில் உள்ள நிர்வாகிகள், இந்திய அணியை பல ஆண்டுகள் வழிநடத்திய கங்குலி தலைமை பொறுப்பேற்க வேண்டும் என்று விரும்பினர், நான் அறிவிக்க வேண்டும் என்று விரும்பினர். இதில் தயவு செய்து மாநில அரசை இழுக்க வேண்டாம், நான் இதில் யாருமல்ல. இது அவர்கள் முடிவெடுத்தது. இங்கு சர்ச்சைகளை நுழைக்காதீர்கள். இது அவர்கள் முடிவு, அவர்கள் அனைவரும் கிரிக்கெட்டை நேசிப்பவர்கள்” என்றார்.
கங்குலி தன் பொறுப்பு பற்றி கூறும்போது, “வாழ்க்கையில் எதுவாக இருந்தாலும் புதிய சவாலே. அவிஷேக் நிர்வாகத்துக்குள் வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது ஏனெனில் அவருக்கு இது உணர்ச்சிகரமான நேரம். நான், பிஸ்வரூப், சுபிர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம். 121 உறுப்பினர்கள் உள்ளனர், முன்னேறும் பாதையை நாங்கள் அனைவரும் சேர்ந்து முடிவெடுப்போம்.
இது முதல்வரின் முடிவல்ல. உறுப்பினர்களிடம் அவர் பேசினார், ஆனால் அதுதான் அனைத்துமல்ல. நான் என்னால் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்வேன். நான் உடனடியாக பொறுப்பேற்றுக் கொள்கிறேன், ஏனெனில் அக்டோபர் 8-ம் தேதி போட்டி இருக்கிறது” என்றார்.