

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஓல்ட் டிராபர்ட் டெஸ்ட் போட்டியில் 176 மற்றும் 78 ரன்களையும் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி 250 ரன்களையும் 1க்கும் மேற்பட்ட விக்கெட்டையும் ஒரே டெஸ்ட்டில் எடுத்த முதல் இங்கிலாந்து வீரர் ஆனதையடுத்து ஐசிசி ஆல்ரவுண்டர் தரவரிசையில் நம்பர் 1 இடத்துக்கு உயர்ந்துள்ளார்.
2வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஹோல்டரைக் காட்டிலும் 54 புள்ளிகள் பின் தங்கியிருந்த பென் ஸ்டோக்ஸ் இப்போது அவரைக் காட்டிலும் 38 புள்ளிகள் கூடுதல் பெற்று ஹோல்டரைப் பின்னுக்குத்தள்ளி நம்பர் 1 ஆல் ரவுண்டர் ஆனார்.
இதன் மூலம் ஹோல்டரின் 18 மாத கால நம்பர் 1 ஆல்ரவுண்டர் இடத்தை முறியடித்து பென் ஸ்டோக்ஸ் அந்த இடத்துக்கு வந்துள்ளார். 2006-ல் ஆண்ட்ரூ பிளிண்டாப் நம்பர் 1 டெஸ்ட் ஆல்ரவுண்டராகத் திகழ்ந்தார், அவருக்குப் பிறகு இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தற்போது இந்த தனித்துவ இடத்தைப் பிடித்துள்ளார்.
மேலும் பென் ஸ்டோக்ஸ் தற்போது எடுத்துள்ள 497 தரவரிசைப் புள்ளிகள், ஜாக் காலீஸுக்கு (517 புள்ளிகள், 2008) அடுத்த இடத்தில் உள்ளது.
இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 3ம் இடத்திலும் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 4ம் இடத்திலும் ரவிச்சந்திரன் அஸ்வின் 5ம் இடத்திலும் உள்ளனர்
டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் பென் ஸ்டோக்ஸ் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷேனுடன் 3ம் இடத்தில் இணைந்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி முதல் இரண்டு இடம் அடுத்த இடத்தில் தற்போது பென் ஸ்டோக்ஸ், லபுஷேன் உள்ளனர்.
இதன் மூலம் கேன் வில்லியம்சன், பாபர் ஆஸம் ஆகியோரும் பென் ஸ்டோக்ஸுக்குக் கீழ்தான் தரவரிசையில் உள்ளனர்.
இங்கிலாந்து கேட்பன் ஜோ ரூட் 9வது இடத்தில் உள்ளார், தொடக்க வீரர் டாம் சிப்லி சதமெடுத்ததையடுத்து 29 இடங்கள் முன்னேறி 35வது இடம் வந்துள்ளார்.
புஜாரா, ரஹானே இருவரும் ஒரு இடம் பின்னடைவு கண்டு முறையே 8 மற்றும் 10ம் இடத்தில் உள்ளனர்.
ஸ்டூவர்ட் பிராட் 2வது டெஸ்ட்டில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதையடுத்து பவுலிங் தரவரிசையில் டாப் 10-க்குள் நுழைந்தார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு இடம் பின்னடைந்து 11வது இடத்தில் உள்ளார். கிறிஸ் வோக்ஸ் 21ம் இடத்தில் இருக்கிறார்.
ஜேசன் ஹோல்டர் ஒரு இடம் குறைந்து பவுலிங் தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ளார், இதில் பாட் கமின்ஸ், நீல் வாக்னர் முதல் 2 இடங்களில் உள்ளனர்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இங்கிலாந்து 186 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் உள்ளது. நியூஸிலாந்தைக் காட்டிலும் 6 புள்ளிகள் அதிகம்.
இதில் இந்திய அணி 360 புள்ளிகளுடன் முதலிடத்திலும் ஆஸ்திரேலியா 296 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும் உள்ளன. மே.இ.தீவுகள் 40 புள்ளிகளில் உள்ளது.