

மும்பை கிரிக்கெட்டுக்கு சுமார் 20 ஆண்டுகளாக தனது பேட்டிங், தலைமைத்துவம் மூலம் அயராத சேவையாற்றி வந்த முன்னாள் இந்திய தொடக்க வீரர் வாசிம் ஜாஃபர் விதர்பா அணிக்கு ஆடவிருக்கிறார்.
தான் விதர்பாவுக்கு ஆடினாலும் வேறு எந்த அணிக்கு ஆடினாலும் ஒரு மும்பை வீரனாகவே தன்னை உணர்வதாக அவர் தெரிவித்தார்.
“19 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பையை விட்டு விலகுவது என்பது ஒரு வித்தியாசமான உணர்வு. கிட்டத்தட்ட இருபதாண்டுகள் மும்பைக்காக ஆடியாகிவிட்டது. எனவே மாறுவது என்னைப் பொறுத்தவரை கடினமான முடிவே. நான் எங்கு விளையாடினாலும் நான் ஒரு மும்பை வீரரே.
2008-முதல் என்னை நிறைய அணிகள் அழைத்தவண்ணம் உள்ளன, ஆனால், இதுவே சரியான தருணம், நிறைய இளம் வீரர்கள் வருகின்றனர், அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்க நான் விரும்பவில்லை.
வேறு வேறு மைதானங்களில், அணியில் விளையாடுவதான சவாலை சந்திக்க விரும்பினேன்” என்றார்.
37 வயதாகும் வாசிம் ஜாபர் 31 டெஸ்ட் போட்டிகளில் 1944 ரன்களை 34.40 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார். 5 சதங்கள், 11 அரைசதங்கள் இதில் இவரது அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் 212 ரன்கள். இந்த இன்னிங்ஸ் ஒரு மறக்க முடியாத இன்னிங்ஸாகும். அதே போல் பாகிஸ்தானுக்கு எதிராக 202 ரன்களையும் எடுத்துள்ளார் வாசிம் ஜாஃபர். கொல்கத்தாவில் 2007-ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியாகும் இது. இதில் 274 பந்துகளைச் சந்தித்த வாசிம் ஜாஃபர் 34 பவுண்டரிகளுடன் 202 ரன்கள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்சிலும் 56 ரன்கள் எடுத்தார் ஜாபர். அந்த டெஸ்ட் போட்டி டிராவானது.
மொத்தம் இதுவரை 223 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 16,845 ரன்களை 50.58 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இதில் 51 சதங்கள் 81 அரைசதங்கள். அதிகபட்ச ஸ்கோர் 314 நாட் அவுட். லிஸ்ட்-ஏ ஒருநாள் போட்டிகளில் 100 ஆட்டங்களில் 4,289 ரன்களை 45.62 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார். இதில் 10 சதங்களும் 29 அரைசதங்களும் அடங்கும்.
“2008-ம் ஆண்டு இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகே நிறைய அழைப்புகள் எனக்கு வேறு ரஞ்சி அணிகளிடமிருந்து வந்தன. ஆனால் நான் மும்பைக்காகவே ஆடினேன். ஆனால் எனது கிரிக்கெட் வாழ்வின் அந்திம காலமான இதில் புதிய சவாலையும் ஒரு புதிய அணியை முன்னேற்றுவதையும் விரும்புகிறேன்” என்றார்.
மும்பை கிரிக்கெட்டுக்காக 20 ஆண்டுகள் அயராது பாடுபட்ட இவருக்கு சிறந்த ஒரு பிரியாவிடையை மும்பை கிரிக்கெட் சங்கம் அளிக்கவில்லையா என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட போது, வாசிம் ஜாஃபர், “நான் என்ன சச்சின் டெண்டுல்கரா?” என்று கேட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் இந்திய தொடக்க வீரர்கள் சொதப்பி வரும் நிலையில், வாசிம் ஜாஃபர், தினேஷ் கார்த்திக் ஜோடி அங்கு தொடக்க ஜோடியாக 50 ரன்களுக்கு அருகில் சராசரி வைத்திருந்ததையும் நாம் நினைவுகூரத் தகுந்தது.
முழு ஆற்றல் வெளிப்படுவதற்கு போதிய வாய்ப்பளிக்காமல் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட வீரர்களில் வாசிம் ஜாஃபரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.