Published : 19 Jul 2020 01:40 PM
Last Updated : 19 Jul 2020 01:40 PM

சுனில் கவாஸ்கர் எடுத்த 10,000 ரன்கள் சாதாரணமல்ல: இப்போது 15-16 ஆயிரம் ரன்களுக்குச் சமம்- பாக்.லெஜண்ட் இன்சமாம் புகழாரம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன் முதலில் 10,000 ரன்கள் மைல்கல்லை எட்டியவர் சுனில் கவாஸ்கர். நவீன கிரிக்கெட்டை ஒப்பிடும் போது கவாஸ்கரின் இந்த ரன்கள் அந்த எண்ணிக்கையைக் காட்டிலும் மதிப்பு மிக்கது என்கிறார் பாக்.லெஜண்ட் இன்சமாம் உல் ஹக்.

சுனில் கவாஸ்கர் தொடக்க வீரராக எதிர்கொண்ட வேகப்பந்து வீச்சாளர்களைப் பார்த்தாலே இப்போது இருக்கும் வீரர்கள் உடல் முழுதும் இரும்புக் கவசத்துடன் தான் இறங்குவார்கள். ஆனால் கவாஸ்கர் ஹெல்மெட் அணியாமல் ஆடியது குறிப்பிடத்தக்கது.

வெஸ்லி ஹால், கிரிபித், கில்கிறிஸ்ட், ஹோல்டிங், ராபர்ட்ஸ், மார்ஷல், வான்பன் ஹோல்டர், கார்னர், வெய்ன் டேனியல், ஜூலியன், டெனிஸ் லில்லி, போத்தம், ரிச்சர்ட் ஹாட்லி, தாம்சன், பாப் வில்லிஸ், கிறிஸ் ஓல்ட், ஜான் ஸ்னோ, இம்ரான் கான், லென் பாஸ்கோ, வாசிம் அக்ரம், கார்ட்னி வால்ஷ் என்று எதிர்கொண்ட அச்சமூட்டும் பவுலர்கள் பட்டியல் இன்னும் நீளும்.

இவர்கள் அனைவரையும் அவர் எதிர்கொண்டதோடு 34 சதங்களில் 15 சதங்கள் அச்சமூட்டும் மே.இ.தீவுகளின் பவுலிங்குக்கு எதிராக எடுத்துள்ளார். இன்றைய தோனி, கோலியை மட்டுமே அறிந்திருக்கும் ரசிகர்களுக்கு தெரியாத ஒரு கவாஸ்கர் இருக்கிறார். அவர் டெல்லியில் 95 பந்துகளில் ஹோல்டிங், ராபர்ட்ஸ், மார்ஷலுக்கு எதிராக டெஸ்ட் சதம் எடுத்த அதிரடி கவாஸ்கர் ஆவார்.

பொதுவாக இன்றைய தலைமுறையினர் கவாஸ்கர் என்றால் உடனே 1975 உலகக்கோப்பையில் 60 ஓவர்கள் ஆடி 36 ரன்கள் எடுத்ததையே கிளிப்பிள்ளை போல் கூறி வருவார்கள். கவாஸ்கர் தன் அறிமுக டெஸ்ட் தொடரில் அதுவும் மே.இ.தீவுகளின் பவுன்ஸ் ட்ராக்கில் 4 டெஸ்ட் போட்டிகளில் 774 ரன்களை விளாசியவர் என்பது இன்றைய கவாஸ்கர் துவேஷ தலைமுறை அறியாததே. இதில் ஒரு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் சதம் இரண்டாவது இன்னிங்சில் இரட்டைச் சதம் அடித்திருக்கிறார், மூன்று முறை இதே போல் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்துள்ளார்.

அந்த கவாஸ்கரின் உண்மையான மதிப்பை அறிந்த இன்சமாம் உல் ஹக் கூறியதாவது:

சுனில் கவாஸ்கர் காலத்திலும் அதற்கு முந்தைய தலைமுறையிலும் நிறைய கிரேட் பிளேயர்கள் இருந்தனர், ஜாவேத் மியாண்டட், விவ் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ், டான் பிராட்மேன், ஆனால் இவர்கள் யாரும் 10,000 ரன்களை எட்ட முடியவில்லை. இன்றைய காலத்தில் நிறைய டெஸ்ட் ஆடினாலும் இந்த சாதனைக்கு அருகே ஒருசிலர்தான் வருகின்றனர்.

என்னை கேட்டால் சுனில் கவாஸ்கரின் அன்றைய 10,000 ரன்கள் இன்றைய 15-16,000 ரன்களுக்குச் சமமானது.

இந்தக் காலங்களில் பேட்ஸ்மென்களுக்காகவே பிட்ச்கள் தயாரிக்கப்பட்டு அதில் ரன்கள் அடிப்பது ஒன்றும் சாதனையல்லவே. சுனில் கவாஸ்கர் பலதரப்பட்ட சூழ்நிலையில் பிட்ச்களில் வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு சாதக ஆட்டக்களங்களில் ஆடி இந்த ரன்களை எடுத்துள்ளார்.

இந்தப் பிட்ச்களில் ஒரு சீசனில் இப்போது 1000, 1500 ரன்களை ஒருவர் எடுக்க முடியும். சுனில் கவாஸ்கர் கால பிட்ச் அப்படியல்ல, மேலும் ஐசிசி இப்போதெல்லாம் ரசிகர்களைக் குஷிப்படுத்த உள்ளூர் நாயகர்கள் ரன்கள் குவிப்பதை ஊக்குவிக்க மட்டைப் பிட்ச்களை அமைக்கிறது.” என்று கூறினார் இன்சமாம் உல் ஹக்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x