Published : 02 Sep 2015 05:47 PM
Last Updated : 02 Sep 2015 05:47 PM

நாம் பொறுமையிழக்காது எதிரணியினரை சோதிக்க வேண்டும்: விராட் கோலி

இலங்கை அணிக்கு எதிரான வெற்றி பந்து வீச்சாளர்களுக்கு சொந்தமானது என்று கூறிய கேப்டன் விராட் கோலி, எதிரணியினரின் பொறுமையை நாம் சோதிக்க வேண்டுமே தவிர, நாம் பொறுமையை இழந்து விடக்கூடாது என்று கூறியுள்ளார்.

வெற்றி குறித்து கோலி அளித்த பேட்டியில், “இந்தத் தொடர் பந்துவீச்சாளர்களுக்கானது என்று கருதுகிறேன். ஏனெனில் பந்துவீச்சாளர்கள் அவ்வளவு சிறப்பாக செயல்பட்டனர். புஜாராவின் சதம் உலகத் தரம் வாய்ந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் பார்த்த சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. இது தவிர பவுலர்கள் செயல்பாடே சிறப்பாக அமைந்தது.

எதிரணி வீரர்களின் பொறுமையை நாம் சோதிக்க வேண்டுமே தவிர, நாம் பொறுமையிழந்து விடக்கூடாது. பவுலிங்கை பொறுத்தவரையில் இந்தத் தொடர் ஒரு அரிய வெளிப்பாடு” என்றார்.

மேத்யூஸ்-குசல் பெரேரா அச்சுறுத்தல் கூட்டணி பற்றி..

டெஸ்ட் போட்டியில் 5-ம் நாள் ஆட்டத்தில் சதக்கூட்டணி அமைவதை எதிர்பார்க்க வேண்டும், ஆனால் எப்படியும் ஒரு வாய்ப்பு வரும் அதனை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும்.

புதிய பந்து எடுக்கும் முன் அழகாக பந்து வீசினோம். ஆட்டத்தை சற்றே மந்தப் படுத்தினோம். அதன் பிறகு விக்கெட் கிடைத்தது. எப்போதும் வாய்ப்பு கைக்கு வரும் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்” என்றார் கோலி.

21 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அஸ்வின் கூறும்போது, “காலே டெஸ்ட் முதல், முதல் நாள் ஆட்டத்தில் என்ன மாதிரியான செயலூக்கத்துடன் இருந்தேனோ அதனை பராமரிக்க முயற்சி செய்தேன்.

பந்துவீச்சில் ரிதம் என்பது மிக முக்கியம். இந்தத் தொடர் முழுதும் ரிதம் என்பதை விட்டுவிடாமல் இருக்க முயற்சி செய்தேன். ஒவ்வொரு முறை பந்து வீச அழைக்கப்பட்ட போதும், துல்லியமான ரிதத்துடன் இருந்தேன்.

கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் இசாந்த் சர்மா அசாத்தியமாக வீசினார். ஒவ்வொருவரும் மற்ற பந்துவீச்சாளர்களுக்கேற்ப செயல்பட்டோம். இது மிகப்பெரிய விஷயம், இதனை சீரான முறையில் செய்யும் அணிகளே சாம்பியன்களாகத் திகழ்கின்றனர்.

நான் முழங்கை காயத்தினால் அவதிப்பட்டு வந்தேன், இதனால் எனது பேட்டிங்கில் சில உத்தி ரீதியான மாற்றங்களை செய்ய நேரிட்டது. பேட்டிங்கில் பங்களிப்பு செய்ய விரும்பினேன், ஆனாலும் அதிக நேரம் கிரீஸில் நிற்க முடியவில்லை.

நேற்று ஒருநாள், அனைத்தையும் மனதிலிருந்து அகற்றிவிட்டு பேட்டிங்கின் போது பந்தை நெருக்கமாக உற்று கவனித்து ஆடினேன், அதுதான் கடைசியில் பயனளித்தது. அணி நிர்வாகத்துக்கும் பயிற்சியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x