

மான்செஸ்டரில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் (176), சிப்லி (12) ஆகியோர் பிரமாதமாக ஆட இங்கிலாந்து அணி தன் முதல் இன்னிங்சில் 469/9 என்று டிக்ளேர் செய்தது.
2ம் நாள் ஆட்ட முடிவில் மே.இ.தீவுகள் தன் முதல் இன்னிங்சில் கேம்பல் (12) விக்கெட்டை சாம் கரனிடம் இழந்து 32 ரன்கள் எடுத்துள்ளது.
ஆனால் ஸ்டோக்ஸ் தன் 176 ரன்களுக்கு 356 பந்துகள் எடுத்துக் கொண்டு 17 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடித்தார், சிப்லி 372 பந்துகளில் 120 ரன்களை வெறும் 5 பவுண்டரிகளுடன் மட்டுமே எடுத்தார். ஆஸ்திரேலியா மாதிரி அணிகளுக்கு எதிராக சிப்லி சரிப்படமாட்டார். விரைவில் வீட்டுக்கு அனுப்பி விடுவர். ஸ்டோக்ஸ் இருவிதமாகவும் ஆடக்கூடியவர்.
மே.இ.தீவுகள் முதல் இன்னிங்சை ஆடிய போது பிராட், கிறிஸ் வோக்ஸ் நன்றாக வீசினர். ஆனால் ஜான் கேம்பல் விக்கெட்டை சாம் கரன் தான் வீழ்த்தினார். ஆட்ட முடிவில் பிராத்வெய்ட் 6 ரன்களுடனும் இரவுக்காவலன் அல்ஜாரி ஜோசப் 14 ரன்களுடனும் களத்தில் நிற்கின்றனர். இவரையும் சாம் கரன் எல்.பி. செய்திருப்பார், ஆனால் ரிவியூ செய்யாததால் ஜோசப் பிழைத்தார். ரீப்ளேயில் அது பிளம்ப் எல்.பி என்று தெரிந்தது.
பவுலிங்கில் மே.இ.தீவுகள் காயங்களினால் அவதியுற்றது, ஜோசப் காயமடைந்தார், ஷனன் கேப்ரியல் தசைப்பிடிப்பினால் அவதியுற்றார். இதனையடுத்து ஓரளவுக்கு பந்துகளை தன் ஆஃப் ஸ்பின்னில் திருப்பிய ராஸ்டன் சேஸ் 172 ரன்களைக் கொடுத்தாலும் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
சிப்லி, ஸ்டோக்ஸ் இருவரும் பந்துகள் ஸ்விங் ஆனாலும் விக்கெட்டுகளைக் கொடுக்க மறுத்தனர். உணவு இடைவேளைக்கு முன் சிப்லி தன் 2வது டெஸ்ட் சதத்தை எடுத்தார். ஸ்டோக்ஸ் உணவு இடைவேளைக்குப் பிறகு தன் 10வது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார். சதம் அடித்த பிறகும் சிப்லி ரன் எடுக்க திணறிய வேளையில் ஸ்டோக்ஸ் கொஞ்சம் ஆக்ரோஷம் காட்டி வேகமாக ரன்களைச் சேர்க்கத் தொடங்கினார், குறிப்பாக ஜோசப் பந்தை நேராக அடித்த சிக்ஸ் அபாரமானது. இதன் மூலம் 150 ரன்களை எட்டினார்.
இரட்டைச் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த பென் ஸ்டோக்ஸ் 176 ரன்களில் கிமார் ரோச் பந்தை ரிவர்ஸ் ஷாட் ஆடப்போய் டவ்ரிச்சிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். சிப்லியும் இவரும் சேர்ந்து சுமார் 94 ஓவர்களில் 260 ரன்களைச் சேர்த்தனர். 395/5 என்று இருந்த இங்கிலாந்து இவர் ஆட்டமிழந்த பிறகு 469/9 என்று ஆகி டிக்ளேர் செய்யப்பட்டது.
சிப்லி தன் மந்த நிலையைப் போக்க ஒரு சேஸ் பந்தை தூக்கி அடித்து கேட்ச் ஆகி வெளியேறினார். ஒல்லி போப் என்ற வீரர் 7 ரன்களில் சேஸ் பந்தை பின்னால் சென்று ஆடும் முயற்சியில் எல்.பி. ஆனார். ஜோஸ் பட்லர் இடம் இங்கிலாந்து அணியில் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இறங்கி சுதந்திரமாக ஆடினார் சேஸை ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசினார். 40 ரன்களில் ஹோல்டரிடம் வீழ்ந்தார்.
வோக்ஸ் (0), சாம் கரன் (17), பெஸ் (31 நாட் அவுட்), பிராட் (11) ஆகியோர் பங்களிப்பு செய்ய உதிரிகள் தன் பங்குக்கு 29 ரன்களை சேர்க்க இங்கிலாந்து 469/9 டிக்ளேர் செய்தது. மேஇ தீவுகள் 1 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்துள்ளது.