Published : 17 Jul 2020 11:42 AM
Last Updated : 17 Jul 2020 11:42 AM

சரிவிலிருந்து இங்கிலாந்தைத் தூக்கி நிறுத்திய ஸ்டோக்ஸ், சிப்லி: இங்கிலாந்து 207/3

மான்செஸ்டரில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்து முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்ற மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார், முதல் நாள் ஆட்ட முடிவில் சிப்லி 86 ரன்களுடனும் பென் ஸ்டோக்ஸ் 59 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.

முன்னதாக மார்க் உட், ஆண்டர்சனுக்கு ஓய்வு அளித்த நிலையில் ஜோப்ரா ஆர்ச்சர் சர்ச்சைக்குரிய விதத்தில் பயோ செக்யூர் பாதுகாப்பை விட்டு வெளியேறி ஊர்சுற்றியதையடுத்து நீக்கப்பட்டார். இதனால் அணியில் சாம் கரண், பிராட், கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

27/2 பிறகு 81/3 என்ற நிலையில் இங்கிலாந்து சரிவடையும் நிலையில் சிப்லி, ஸ்டோக்ஸ் கூட்டணி 126 ரன்களை ஆட்டமிழக்காமல் சேர்த்துள்ளனர், சமீப காலங்களாக இங்கிலாந்து உள்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் நல்ல முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்களை எடுப்பதில் திணறி வரும் நிலையில் 253 பந்துகள் சந்தித்து 4 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் எடுத்த சிப்லியின் இன்னிங்ஸ் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஆனால் 68 ரன்களில் சிப்லி இருந்த போது ஜேசன் ஹோல்டர் 2வது ஸ்லிப்பில் ஷனன் கேப்ரியல் பந்தில் கையில் வந்த கேட்சை கோட்டை விட்டார்.

பென் ஸ்டோக்ஸ் கொஞ்சம் ஆக்ரோஷ முனைப்புடன் ஆடினார், அதனால்தான் தேநீர் இடைவேளைக்கு முன்பாக 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஃப் ஸ்பின்னர் ராஸ்டன் சேஸ் பந்தை நேராக சிக்ஸ் அடித்தார். ஆனால் ஸ்டோக்ஸும் கொஞ்சம் சந்தேகத்துடன் தான் ஆடினார், 159 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார் இதில் 4 பவுண்டரிகள் 1 சிக்சர் அடங்கும்.

அணிக்குத் திரும்பிய ஜோ ரூட் 23 ரன்களில் நன்றாக ஆடிவந்தார், ஆனால் அல்ஸாரி ஜோசப் பந்து ஒன்றை தேவையில்லாமல் ஆடி எட்ஜ் செய்து ஹோல்டரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

தொடக்கத்தில் மே.இ.தீவுகள் பவுலர் ஷனன் கேப்ரியல் சரியாக வீசவில்லை. ராஸ்டன் சேஸ் (2/53) வந்த பிறகுதான் விக்கெட் விழுந்தது. முதலில் ரோரி பர்ன்ஸ் (15) சேஸ் பந்து திரும்பும் என்று எதிர்பார்த்தார் அது நேராகச் சென்றது இதனால் கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். ஜாக் கிராலி ரன் எடுக்காமல் லெக் திசையில் திருப்பி விட நினைத்து சேஸ் பந்தை லெக் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ரூட் ஆட்டமிழந்தவுடன் இங்கிலாந்து சரியும் என்று எதிர்பார்த்த நிலையில் பென் ஸ்டோக்ஸ், சிப்லி தூக்கி நிறுத்தினர். இருவரும் 126 ரனக்ளை இதுவரை சேர்த்துள்ளனர்.

கேப்ரியல் மீண்டும் மாலையில் வீச வந்த போது பிரமாதமாக வீசினார். அப்போதுதான் சிப்லி கொடுத்த கேட்சை ஹோல்டர் நழுவ விட்டார். முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 207/3 என்று தன்னம்பிக்கையுடன் சென்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x