

இங்கிலாந்து-மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று தொடங்கவிருக்கும் 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து அந்த அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளார் ஜோப்ரா ஆர்ச்சர் நீக்கப்பட்டுள்ளார்.
கரோனா காலத்தில் நடக்கும் டெஸ்ட் தொடர் என்பதால் வீரர்களுக்கு கடும் கோவிட்-19 தடுப்பு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதனைக் கடைப்பிடிக்க ஜோப்ரா ஆர்ச்சர் தவறியதால் அவர் டெஸ்ட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்,
மேலும் அவர் 5 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், 2 கரோனா வைரஸ் டெஸ்ட்களை அவர் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இவரது சுய-தனிமை காலத்துக்குள் 2 பரிசோதனைகளிலும் நெகெட்டிவ் என்று வந்தால்தான் இவர் தொடர முடியும்.
“நான் செய்த காரியத்துக்காக மிகவும் வருந்துகிறேன். நான் என்னை மட்டுமல்ல அணி, நிர்வாகம் அனைவரையுமே அபாயத்தில் ஆழ்த்தி விட்டேன். நான் இதன் விளைவுகளை முழுதும் ஏற்கிறேன். அனைவரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்.” என்றார் ஜோப்ரா ஆர்ச்சர்.
இரு அணிகளும் உயிர்-பாதுகாப்பு சூழல் ஏற்படுத்தப்பட்டு அதற்குள்தான் சாப்பாடு, உறக்கம், பயிற்சி எல்லாமே என்று இருந்து வருகின்றனர், இந்நிலையில் ஆர்ச்சர் மீறியதால் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
ஆனால் ஜோப்ரா ஆர்ச்சர் எவ்வாறு பயோ-செக்யூர் விதிமுறைகளை மீறினார் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.