Published : 27 Sep 2015 12:15 PM
Last Updated : 27 Sep 2015 12:15 PM

வங்கதேச ஏ அணியின் முதல் வரிசை பேட்ஸ்மன்களை காலி செய்த வருண் ஆரோன்

பெங்களூருவில் இன்று தொடங்கிய 3 நாள் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் வங்கதேச ஏ அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் விக்கெட்டை விரைவில் வீழ்த்தினார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன்.

அந்த அணி உணவு இடைவேளையின் போது 5 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

டாஸ் வென்ற இந்தியா ஏ கேப்டன் ஷிகர் தவண் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். ஆட்டத்தின் 2-வது ஓவரை வீசிய வருண் ஆரோன் சவுமியா சர்க்கார் (0), மோமினுல் ஹக் (2) ஆகியோரை வீழ்த்தினார்.

இருவருமே விக்கெட் கீப்பர் நமன் ஓஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர்.

3-வது ஓவரில் மற்றொரு தொடக்க வீரர் அனாமுல் ஹக் ரன் எடுக்காமல் ஈஷ்வர் பாண்டே பந்தில் ஆட்டமிழந்தார். இவரும் நமன் ஓஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பிறகு 6-வது ஓவரில் விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் ரன் எடுக்காமல் தமிழக வீரரும் பதிலி ஆட்டக்காரருமான பாபா அபராஜித்திடம் கேட்ச் கொடுத்து வருண் ஆரோனிடம் ஆட்டமிழந்தார்.

வங்கதேசம் 6- வது ஓவரில் 6 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆனால் அதன் பிறகு நசீர் ஹுசைன் 28 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 32 ரன்களை விளாச அவருடன் சபீர் ரஹ்மானும் அடித்து ஆட அடுத்த 8 ஓவர்களில் 44 ரன்கள் எடுத்து ஸ்கோர் 50-ஆக உயர்ந்தது.

ஆனால் 32 ரன்கள் எடுத்த நசீர் ஹுசைனும் நமன் ஓஜாவிடம் கேட்ச் கொடுத்து அபிமன்யு மிதுனிடம் வீழ்ந்தார்.

தற்போது சபீர் ரஹ்மான் 53 ரன்களுடனும் ஷுவாகத ஹோம் 19 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

வருண் ஆரோன் 6 ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x