Published : 13 Jul 2020 08:04 am

Updated : 13 Jul 2020 08:46 am

 

Published : 13 Jul 2020 08:04 AM
Last Updated : 13 Jul 2020 08:46 AM

ஹீரோவான ஜெர்மைன் பிளாக்வுட் அபாரம்; 2000க்குப் பிறகு... மே.இ.தீவுகள் அபார வெற்றி

blackwood-hero-as-windies-beats-england-in-first-test
ஜெர்மைன் பிளாக்வுட் அபார பேட்டிங்.

சவுத்தாம்ப்டன் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி 2000-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. வெற்றி இலக்கான 200 ரன்களை 6 விக்கெட்டுகளை இழந்து மே.இ.தீவுகள் எடுக்க ஜேசன் ஹோல்டர் தலைமை அணி மீண்டும் இங்கிலாந்தை மண்ணைக் கவ்வச் செய்துள்ளது.

பென் ஸ்டோக்ஸ் தன் முதல் டெஸ்ட்டிலேயே கேப்டன்சியில் தோல்வி கண்டார், ஸ்டூவர்ட் பிராடை உட்கார வைத்ததற்கான பலனை அவர் அனுபவித்ததாக விமர்சனங்கள் நிச்சயம் இவருக்கு எதிராக எழவே செய்யும்.

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து 313 ரன்களுக்குச் சுருண்டது. உண்மையில் 249/3 என்று வலுவான நிலையில் இருந்த போது பென் ஸ்டோக்ஸ் 46 ரன்களில் ஹோல்டரிடம் 2ம் முறையாக இந்த டெஸ்ட்டில் ஆட்டமிழக்க சரிவு தொடங்கியது. அடுத்த 7 விக்கெட்டுகளை 64 ரன்களுக்கு இழந்து 313 ரன்களுக்குக் காலியானது. மே.இ.தீவுகள் அணியில் கேப்ரியல் பிரமாதமாக வீசி 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

வெற்றி பெற 200 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி தொடக்கத்திலேயே காம்பலை காயத்துக்கு இழந்து அவர் பெவிலியன் திரும்பினார், இதோடு பிராத்வெய்ட், புரூக்ஸ், ஷேய் ஹோப் விக்கெட்டுகளையும் ஆர்ச்சரும், மார்க் உட்டும் சேர்ந்து வீழ்த்த மே.இ.தீவுகள் ஒரு கட்டத்தில் 27/3 என்று இருந்தது, அதாவது கேம்பலையும் சேர்த்து உண்மையில் 4 வீரர்களை இழந்திருந்தது.

ஆனால் அங்குதான் ஜெர்மைன் பிளாக்வுட் நின்றார், தன் வாழ்நாளின் மறக்க முடியாத ஒரு இன்னிங்சை ஆடி 154 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் எடுத்து துரதிர்ஷ்டவசமாக பென் ஸ்டோக்ஸ் பந்தை மிட் ஆஃபுக்கு மேல் தூக்கி அடிக்கும் முயற்சியில் ஆண்டர்சனிடம் கேட்ச் ஆகி வெளியேறினார், ஆனால் மே.இ.தீவுகள் வெற்றியை உறுதி செய்து விட்டுத்தான் ஆட்டமிழந்தார்.

கேம்பலின் காலை தன் யார்க்காரால் ஜோப்ரா ஆர்ச்சர் பெயர்க்க அவர் காயமடைந்து வெளியேறி பிறகு கடைசியில் இறங்கி 8 நாட் அவுட் என்று வெற்றி பெறும்போது கிரீசில் இருந்தார். ஆனால் 2ம் முறையும் மார்க் உட் பந்தில் முகத்துக்கு நேரே ஹெல்மெட் கம்பியில் பந்து வந்து தாக்கியது.

பிளாக்வுட் இங்கிலாந்துக்கு எதிராக வைத்துள்ள சராசரி 55. நேற்று அவருக்கு அதிர்ஷ்டம் இருந்தது. 5,20, 29, ஆகிய ரன்களில் பிளாக்வுட் இருந்த போது அவருக்கு முறையே ஸ்டோக்ஸ், பட்லர், ரோரி பர்ன்ஸ் ஆகியோர் கேட்சை விட்டனர்.

2017-க்குப் பிறகு தன் 2வது டெஸ்ட்டை ஆடும் ஜெர்மைன் பிளாக்வுட் ஹீரோவானார். 27/3 என்ற நிலையில் ராஸ்டன் சேஸ்(37) உடன் பிளாக்வுட் 73 ரன்கள் கூட்டணி அமைத்தார். பிறகு டவ்ரிச்சுடன் 68 ரன்களையும் கேப்டன் ஹோல்டருடன் 21 ரன்களையும் சேர்த்தார் பிளாக்வுட்.

2வது இன்னிங்ஸை தொடங்கிய போது ஜோப்ரா ஆர்ச்சர் தீப்பொறி பறக்க வீசினார், இதில் பிராத்வெய்ட் கால்களை நகர்த்தாமல் யார்க்கர் லெந்த் பந்தில் மட்டையில் பட்டு பவுல்டு ஆனார். காரணம் அதற்கு முன்பு ஆர்ச்சர் அவருக்கு வீசிய ஷார்ட் பிட்ச் பந்துகளே. ஷம்ரா புரூக்ஸ் ஆர்ச்சரின் இன்ஸ்விங்கரில் எல்.பி.ஆகி 0-வில் வெளியேற, ஷேய் ஹோப் மார்க் உட்டின் ஆப் கட்டருக்கு பவுல்டு ஆனார்.

சேஸ் ஒரு போராளி போல் ஒரு முனையில் நின்று 37 ரன்களை எடுத்தார், ஆனால் ஆர்ச்சரின் திடீர் பவுன்சர் ஒன்றில் திக்குமுக்காடி கேட்ச் ஆகி வெளியேறினார். டவ்ரிச்சுக்கு ஷார்ட் பிட்ச் பவுலிங் என்றால் என்னவென்று இங்கிலாந்து காட்டியது. திணறினார், ஆனால் விகெட்டை விடவில்லை. 5-ல் ஒரு பவுன்சர் கையில் பட்டு கேட்ச் ஆனது, இது ரிவியூவில் நாட் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

பென் ஸ்டோக்ஸ் கேப்டனாகக் கொஞ்சம் ஓபி அடிப்பவர் போல் தெரிகிறது, ஏனெனில் டவ்ரிச் விக்கெட்டை வீழ்த்தும் வரை அவர் 4 ஒவர்களையே வீசியிருந்தார், டவ்ரிச்சுக்கு ஒரு பந்தை அவுட்ஸ்விங்கராக்க கேட்ச் ஆனது, ஆனால் அது நோ-பால், ஆனால் அடுத்த பந்தே மிகப்பிரமாதமான ஒரு கட்டரில் டவ்ரிச்சை ஸ்கொயர் ஆக்கி எட்ஜ் செய்ய வைத்து வீழ்த்தினார்.

கடைசியில் விட்டுக் கொடுக்காத ஜேசன் ஹோல்டர் 14 நாட் அவுட், கேம்பல் 8 நாட் அவுட். 200/6, மே.இ.தீவுகள் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட், ஸ்டோக்ஸ் 2 விக்கெட். ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சில் ஒரு கோளாறு இருக்கிறது, அடித்துப் போட வேண்டிய நேரத்தில் குட் லெந்த்தில் வீசி பிளாக்வுட்டை செட்டில் ஆகவிட்டார். ஆட்ட நாயகனாக ஷனன் கேப்ரியல் தேர்வு செய்யப்பட்டார். மே.இ.தீவுகள் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

அடுத்த டெஸ்ட் ஓல்ட் ட்ராபர்டில் நடக்கிறது, இதில் மே.இ.தீவுகள் வென்றால் 1988-க்குப் பிறகு இங்கிலாந்தில் தொடரை வெல்ல வாய்ப்புள்ளது. ஆனால் இந்தப் போட்டிக்கு ஜோ ரூட் வந்து விடுவார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Blackwood HeroAs Windies beats England in First testகிரிக்கெட்இங்கிலாந்துமே.இ.தீவுகள்ஜேசன் ஹோல்டர்ஜெர்மைன் பிளாக்வுட்ராஸ்டன் சேஸ்பென் ஸ்டோக்ஸ்விளையாட்டுமே.இ.தீவுகள் வெற்றிஇங்கிலாந்து தோல்வி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author