

சிஎஸ்கே அணிக்காக தோனி கேப்டன்சியின் கீழ் ஆடிய தமிழக வீரர் எஸ்.பத்ரிநாத், தோனி எப்பேர்ப்பட்ட கேப்டன் என்பதைப் பற்றி மனம் திறந்தார்.
ஆங்கில ஊடகம் ஒன்றில் அவர் தோனி பற்றி கூறியதாவது:
தோனி எப்போதுமே அணியில் வீரர்களின் ரோல்களில் அதிக கவனம் செலுத்துவார். என்னுடைய ரோல் பெரும்பாலும் கடினமான சூழலிலிருந்து அணியை மீட்க வேண்டும்.
என் பணி மிடில் ஆர்டர் பணியாகும். தோனியின் பலம் என்னவெனில் வீரர்களுக்கு கூடுதல் வாய்ப்பளிப்பார். பத்ரி நன்றாக ஆடுகிறார் என்று தோனி நினைத்தாரானால் பத்ரி இருப்பார், ‘நான் வாய்ப்புகள் வழங்குவேன், அவர் நிரூபிக்கட்டும்’என்பார் தோனி.
அதே வேளையில் ஒரு வீரர் சரியில்லை என்றால் கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது. அவர் ஒரு முடிவெடுப்பார், என்ன வந்தாலும் சரி என்று அதில் உறுதியாக இருப்பார்.
நாங்கள் எப்படி ஆடினாலும் ஓய்வறைச் சூழல் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும், உரிமையாளர்களும் எங்களை ஒரே மாதிரியாகத்தான் நடத்துவார்கள். அணியில் பெரிய சகோதரத்துவ சூழல் நிலவும். தோனி முதல் அனைவரும் ஒரே மாதிரியாகவே நடத்தப்படுவார்கள்.
இவ்வாறு கூறினார் பத்ரிநாத்.