

மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதில் 2வது இடத்தில் இருக்கும் பிராட் தேர்வு செய்யப்படவில்லை. இது ஏதோ உத்தி ரீதியான காரணங்களுக்காக என்று அணித்தேர்வுக்கு குழு தெரிவித்துள்ளது.
ஆனால் ஸ்டூவர்ட் பிராட் இதனை ஏற்கவில்லை, அவர், “நான் குறிப்பாக உணர்ச்சிவயப்படுபவன் அல்ல, ஆனால் கடந்த இரு தினங்கள் எனக்கு கஷ்டமாக இருக்கிறது. நான் ஏமாற்றமடைந்தேன் என்பது குறைவாகக் கூறுவதே. நாம் நம் போனை கீழே போடுகிறோம் போன் உடைந்து விடுகிறது என்றால் ஏமாற்றமடைவோம். ஆனால் இது ஏமாற்றமல்ல, அதையும் தாண்டியது.
நான் கடும் கோபத்திலும் வெறுப்பிலும் இருக்கிறேன். என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. கடந்த 2 ஆண்டுகளில்தான் நான் மிகச்சிறப்பாக வீசி வருகிறேன். ஆஷஸ் தொடரில் இருந்தேன், தென் ஆப்பிரிக்காவில் சென்று வென்றதில் முக்கியப் பங்காற்றியுள்ளேன்.
நான் அணித்தேர்வு தலைவர் எட் ஸ்மித்திடம் நேற்று பேசினேன். 13 வீரர்களை தேர்வு செய்வதோடு என் கடமை முடிந்து விட்டது என்றார். என் எதிர்காலம் பற்றி அவரிடம் கேள்வி எழுப்பினேன். ஆம் நான் வெறுப்படைந்துள்ளேன், முதல் டெஸ்ட் அணியில் இடம்பெற எனக்கு அனைத்து தகுதிகளும் இருக்கின்றன.
அதற்காக எனக்குப் பதிலாகத் தேர்வு செய்யப்பட்ட பவுலர்கள் ஆடத் தகுதியற்றவர்கள் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. கிறிஸ் வோக்ஸ், சாம்கரன் நன்றாக வீசுகின்றனர்” என்றார் பிராட்.
2012 முதல் 51 டெஸ்ட் தொடர்ச்சியாக இங்கிலாந்துக்காக ஆடியுள்ளார் பிராட். இப்போது அதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.