'அடுத்த வேளை சாப்பிட உணவு இருக்கிறது வெள்ளை இன விவசாயிகளை நினைத்தீ்ர்களா?': கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாக பேசிய இங்கிடிக்கு தென். ஆப்பிரிக்க முன்னாள் வீரர்கள் கண்டனம்

தென் ஆப்பிரிக்க வீரர் லுங்கி நிகிடி : கோப்புப்படம்
தென் ஆப்பிரிக்க வீரர் லுங்கி நிகிடி : கோப்புப்படம்
Updated on
2 min read

கறுப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் லுங்கி நிகிடியை கண்டித்துள்ள தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர்கள், கறுப்பினத்தவர்கள் மட்டும் இனரீதியாக பாதிக்கப்படவில்லை, வெள்ளை இன விவசாயிகளும் நசுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் லுங்கி இங்கிடியின் கருத்துக்கு தென் ஆப்பிரிக் கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கறுப்பின அமெரிக்கர் ஜார்ஜ் ஃபிளாய்ட் போலீஸாரால் கழுத்தில் கால் வைத்து மிதக்கப்பட்டு கொல்லப்பட்டபின் கறுப்பின மக்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் ஆதரவுக் குரல் எழுந்து வருகிறது. கிரிக்கெட்டிலும் கறுப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் வலுத்து வருகிறது. மைக்கேல் ஹோல்டிங், ஜேஸன் ஹோல்டர், டேரன் சாமி உள்ளிட்ட பல்வேறு வீரர்கள் கறுப்பின மக்களுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி தனது ஃபேஸ்புக் பதிவில் “ கறுப்பின மக்களுக்கு எதிராக நடக்கும் சில விஷயங்களை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும், அவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும்” எனத் தெரிவித்தார்

இதற்கு தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர்கள் ரூடி ஸ்டெயின், டிப்பெனார், பாட் சிம்காக்ஸ் போன்றவர்கள் லுங்கி இங்கிடியை விமர்சித்துள்ளனர்.

ரூடி ஸ்டெயின் பேஸ்புக்கில் பதிவிட்ட கருத்தில் “ இனவெறிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க வீரர்கள் நிற்க வேண்டும் என நம்புகிறேன். கறுப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அதேநேரத்தில் வெள்ளை இன விவசாயிகள் நிலையையும் மறந்துவிடக்கூடாது. நாள்தோறும் வெள்ளையின விவசாயிகள் வேட்டையாடப்பட்டு மிருகங்கள் போல் பலிகொடுக்கப்படுகிறார்கள். அவர்களை நாம் இழந்துவிடுவோம்” எனத் தெரிவித்தார்

டிப்பெனார் பதிவிட்ட கருத்தில் “ கறுப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவே அச்சப்படுகிறேன். இது இடது சாரி இயக்கத்தைத் தவிர ஏதுமில்லை. லுங்கி நிகிடி கறுப்பின மக்களைப் பற்றி மட்டும் நினைக்கக்கூடாது, தாமஸ் சோவெல், லாரி எல்டர், வால்டர் வில்லியம்ஸ், மில்டன் பிரைட்மன் ஆகியோரையும் சிந்திக்க வேண்டும். அனைவரும் வாழ வேண்டும். தோளோடு தோள் சேர்ந்து நான் நிற்க வேண்டுமானால், லுங்கி நிகிடி, வெள்ளை இன விவசாயிகள் தாக்குதலுக்கு எதிராகவும் நிற்க வேண்டும்” எனத் தெரிவித்தார்

பாட் சிம்காக்ஸ்
பாட் சிம்காக்ஸ்

தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் பாட் சிம்காக்ஸ் பதிவிட்ட கருத்தில் “ என்ன முட்டாள்தனமாக பேசுகிறீர்கள். லுங்கி இங்கிடி தேவைப்பட்டால் சுயமாக முடிவு எடுக்கட்டும். தென் ஆப்பிரிக்க வீரர்களின் நம்பிக்கையில் தலையிடுவதை தவிருங்கள்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் முதலில் இதை நிறுத்த வேண்டும். கிரி்க்கெட்டை மட்டும் பாருங்கள். இங்கிடிக்கு அடுத்த வேளை சாப்பிடஉணவு இருக்கிறது. ஆனால், தென் ஆப்பிரி்க்க வெள்ளைஇன விவசாயிகள் நிலையை சிந்திக்க வேண்டும். பெரும் அழுத்தத்தில் சிக்கி இருக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்

லுங்கி இங்கிடியின் கருத்துக்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன்ட்ரூ பிரீட்கே கூறுகையில் “ விளையாட்டு வீரர்களில் ஆர்வலர் உருவாவதை வரவேற்கிறோம். இங்கிடி தனது கருத்தை தெரிவிக்க உரிமை இருக்கிறது. அவரின் கருத்துக்கு எதிராக நியாயமற்ற வகையில் விமர்சி்க்க வேண்டாம் என நினைக்கிறோம்” எனத் தெரிவித்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in