Last Updated : 09 Jul, 2020 08:31 PM

 

Published : 09 Jul 2020 08:31 PM
Last Updated : 09 Jul 2020 08:31 PM

ஆசியக் கோப்பை ஒத்திவைப்பு: 'கங்குலி வார்த்தையை மதிக்கமாட்டோம்' என்று கூறிய பாக். கிரிக்கெட் வாரியம் என்ன செய்யப்போகிறது?

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி : கோப்புப்படம்

புதுடெல்லி

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு ரத்து செய்யப்படுகிறது என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நேற்று தெரிவித்தார். இந்நிலையில், அதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிண்டல் செய்து கங்குலி வார்த்தைக்கு மதிப்பளிக் முடியாது என்று தெரிவித்திருந்தது.

ஆனால் உண்மையாகவே, ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2021-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் இன்று ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்தப்பட இருந்தது. ஆனால், கரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கையில் மாற்றப்படுவதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பேசிவந்தது.

ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலிடமும் பேசிவந்தது. 2022-ம் ஆண்டு ஆசியக் கோப்பையை தாங்கள் நடத்திக்கொள்வதாகவும், இந்த ஆண்டு இலங்கை நடத்திக் கொள்ளட்டும் என்றும் ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆலோசனை தெரிவித்திருந்தது.

முன்கூட்டியே அறிவித்த கங்குலி

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, “ இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடக்க இருந்த ஆசியக் கிரிக்கெட் கோப்பை ரத்து செய்யப்படுகிறது. டிசம்பர் மாதம் இந்திய அணிக்கு முழுமையான சீரிஸ் தொடங்கும்” எனத் தெரிவித்திருந்தார். ஆசியக் கோப்பை ரத்துக்கான எந்த விதமான காரணத்தையும் அவர் தெரிவிக்கவில்லை.

ஏனென்றால், இலங்கையில் ஆசியக் கோப்பையை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கங்குலியின் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்த ஆண்டு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்குமா அல்லது கங்குலி கூறியது போல் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊடகப்பிரிவு இயக்குநர் சமில் ஹசன் புர்னி கங்குலி அறிவிப்பு குறித்து இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து என்று அறிவிக்க கங்குலி யார்? அவருக்கு யார் உரிமை கொடுத்தது?

இதுபோன்ற அறிவிப்புகளை ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் தலைவர்தான் அறிவிக்க முடியும். ஆசியக் கோப்பைத் தொடரை இலங்கை நடத்த நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். கங்குலி வார்த்தைக்கு எல்லாம் நாங்கள் மதிப்பளிக்க முடியாது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு அறிவிப்பை கங்குலி வெளியிடுவார். அதற்கெல்லாம் முக்கியத்துவம் தரமுடியுமா” எனத் தெரிவித்தார்.

ஆசியக் கோப்பை ரத்து

இந்நிலையில் ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் இன்று மாலை ட்விட்டரில் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில் “ கரோனா வைரஸ் பரவல் குறித்து தீவிரமான ஆலோசித்தோம். வீரர்களின் பாதுகாப்புச் சூழலைப் பரிசீலனை செய்தோம். அந்த ஆலோசனையின் முடிவில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆசியக் கோப்பையை நடத்த சாதகமான சூழல் இல்லை.

ஆதலால், 2021-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு ஆசியக் கோப்பைத் தொடர் ஒத்தி வைக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனால் கங்குலி நேற்று அறிவித்த அறிவிப்பு உண்மையானது. அவரைக் கிண்டல் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்ன செய்யப்போகிறது?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x