

கொல்கத்தாவின் இளவரசர் என்ற செல்லப்பெயருடன் இருந்து தற்போது இந்திய கிரிக்கெட்டின் “தாதா“வாக வலம் வரும் சவுரவ் கங்குலி இன்று பிறந்தநாள் காண்கிறார். இந்திய கிரிக்கெட்டின் மரபுகளை தயங்காமல் தகர்த்தவர். ஆஃப் சைடில் அசுரன், இமாலய சிக்ஸர்களின் எந்திரன். இந்திய அணியின் இயல்பை மாற்றியவர், இயல்பிலேயே ஆளுமை பண்பு நிறைந்தவர்.
1992-ம் ஆண்டு இந்திய அணி அசாருதீன் தலைமையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். கபில்தேவ், ஸ்ரீகாந்த் போன்றோருடன் தனது 19-வது வயதில் ஆடிய அந்த போட்டியில் 3 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அத்தொடரின்போது சீனியர் வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டுசெல்ல மறுத்து, தான் கிரிக்கெட் ஆடத்தான் இங்கு வந்தேன் என கங்குலி கூறியதாக சொல்வது உண்டு. அத்தொடருடன் கழற்றிவிடப்பட்டு 4 ஆண்டுகள் கழித்துதான் மீண்டும் வாய்ப்பு பெற்றார். லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அடித்த சதமும், அதன் பிறகு நடந்ததும் வரலாறு.
டெண்டுல்கர் தலைமையில் வென்ற டைடன் கோப்பை ஒருநாள் தொடரில் துவக்க வீரராக ஏற்றம் பெற்றார். உலகின் தலைசிறந்த துவக்க ஜோடியாக சச்சினுடன் இணைந்து 136 இன்னிங்ஸ்களில் 6609 ரன்கள் குவித்தது இன்றளவும் யாரும் நெருங்க முடியாத சாதனையாக உள்ளது. சஹாரா கோப்பையில் எடுத்த ஆல்ரவுண்டர் அவதாரமாகட்டும், ஸ்ரீநாத்துடன் இணைந்து பந்துவீச்சை துவக்கியதாகட்டும், 7 பீல்டர்களை நிறுத்தினாலும் ஆஃப் சைடுகளில் விளாசிய பவுண்டரிகளும், கிரீஸிலிருந்து இறங்கிவந்து தூக்கும் இமாலய சிக்ஸர்களும் கடந்த நூற்றாண்டின் இறுதியில் கிரிக்கெட் பார்த்த யாருடைய நினைவுகளிலிருந்தும் அகலாதவை.
கேப்டனாக இருந்தபோது வழக்கமாக கடைபிடிக்கப்படும் மரபுகளை மாற்றி துணிச்சலான முடிவுகளை அமல்படுத்துவதில் அவர் காட்டிய உறுதி அனைவரும் அறிந்ததே. ஸ்பெஷலிஸ்ட் விக்கெட்கீப்பரான நயன் மோங்கியாவை நீக்கிவிட்டு சபாகரீம் போன்ற பேட்டிங் செய்யும் விக்கெட் கீப்பர்களை பரிசோதித்து அம்முயற்சியில் வெற்றி கிடைக்காததால், பேட்டிங் மட்டும் செய்து கொண்டிருந்த டிராவிட்டை கீப்பிங் செய்ய வைத்தார். நிபுணர்கள் சேவாக்கின் கால்நகர்த்தல்களை குறைசொல்லி டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு தகுதியானவரல்ல என்று கூறிக்கொண்டிருந்தபோது, அவரை துவக்க வீரராக களமிறக்கி டெஸ்டுகளின் சுவாரஸ்யத்தை கூட்டினார். யுவராஜ்சிங்கையும் மற்றொரு தொடக்கவீரராக இறக்க அவர் திட்டமிட்டது மட்டும் நடந்திருந்தால் டெஸ்ட் போட்டிகளின் தோற்றம் மாறியிருக்கும். தோனியை ஒன் டவுனில் பேட்டிங் செய்ய வைத்ததும் இதில் குறிப்பிடத்தக்கது. டாஸ் போடும் அதிகாரம் மட்டும் இருந்த இந்திய கேப்டன்களுக்குரிய முகத்தை சர்வதேச அரங்கில் மாற்றியவர். ஸ்டீவ் வாக்கிற்கு இவர் கொடுத்த “ஷட்அப்” பதில் இங்கு நினைவு கூறத்தக்கது.
2003 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுடன் முதல் போட்டியில் தோற்றவுடன் வீரர்களின் வீடுகளுக்கு கற்கள் பறந்தன, வீரர்கள் கட் அவுட்கள் சாய்க்கப்பட்டன, ரசிகர்கள் இந்திய அணியின் மீது கடும் கோபமும் அதிருப்தியும் கொண்டிருந்த காலம். ஆனால் அதன் பிறகு அந்த உலகக்கோப்பையில் கடைசியில் இறுதிப்போட்டியில் மீண்டும் ஆஸி.க்கு எதிராக இந்திய அணி தோற்றது, இடையில் இந்திய அணி அனைத்து அணிகளையும் வீழ்த்தியது. 2003 உலகக்கோப்பையை வென்றிருந்தால் ‘தாதா’ கேப்டன்சி திறமைக்கு சூட்டிய மகுடமாக அமைந்திருக்கும், ஆனால் துரதிர்ஷ்டவசமாகவும், ஆஸ்திரேலியாவின் வலுவாலும் தோற்க நேரிட்டது.
தோல்விகளை அவ்வளவு எளிதில் மறக்காதவர் என்பது மட்டுமல்ல அவற்றில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவும் தவறாதவர். 2016-ல் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான குழுவில் இடம்பெற்றபோது, ஏற்கனவே (2005-ல்) கிரேக்சேப்பலை பயிற்சாளர் பதவிக்கு தான் பரிந்துரை செய்ததை நினைவுகூர்ந்து (சேப்பல்தான் கங்குலியின் கேப்டன் பதவி பறிபோகவும், அணியிலிருந்து நீக்கப்படவும் காரணமாக இருந்தார்), பயிற்சியாளர் தேர்வில் மீண்டும் தவறு செய்ய மாட்டேன் என்றார். அவருடன்
இணைந்து சச்சினும், லக்ஷ்மணும் அப்போது தேர்வுசெய்த பயிற்சியாளர்தான் அனில் கும்ளே. மும்பையில் சட்டையை கழற்றிய பிளிண்டாப்புக்கு பதிலடியாக லார்ட்ஸில் சட்டையை கழற்றி சுழற்றியது இவரது அடையாளங்களில் ஒன்றானது.
மேற்கு வங்காள கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோது பாரம்பரியமான ஈடன்கார்டன் மைதானத்தை நவீனப்படுத்தினார். நீதிமன்ற பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சேர்மனாக பதவியேற்றவுடன், பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்துவதில் இவர் காட்டிய வேகம் இந்திய கிரிக்கெட் மற்றுமொரு புதிய வெர்ஷனுக்குள் நுழைந்துள்ளதை உணர்த்துகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சேர்மனாகும் வாய்ப்பும் நெருங்கி வருகிறது. அது நடந்தால் உலக கிரிக்கெட்டிற்கும் ஒரு புத்துணர்ச்சியாக அமையும்.
“நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்” என்ற சுவாமி விவேகானந்தரின் பொன்மொழியை தனது கிட்பேக்கில் எழுதி வைத்திருப்பாராம் தாதா.