Last Updated : 07 Jul, 2020 05:39 PM

 

Published : 07 Jul 2020 05:39 PM
Last Updated : 07 Jul 2020 05:39 PM

 ‘தல’ தோனி: 7-ம் மனிதன்!

இந்திய கிரிக்கெட் அணியின் ஈடு இணையில்லா கேப்டன் ‘தல’ எம்.எஸ். தோனியின் 39-ம் பிறந்த நாள் இன்று. கேப்டன், பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பிங் என கிரிக்கெட்டில் அழுத்தமான தடங்களைப் பதித்தவர்.

அவரைப் பற்றிய சில அரிய தகவல்கள்:

* எம்.எஸ். தோனி ராஞ்சியில் உள்ள டிஏவி வித்யா மந்திர் பள்ளியில் படித்தபோது விளையாட்டுக்குள் ஆர்வத்துடன் நுழைந்தவர். கிரிக்கெட்டை விளையாடத் தொடங்குவதற்கு முன்பு அவருடைய ஆர்வம் எல்லாம் கால்பந்தாட்டம், பாட்மிண்டன் ஆகிய விளையாட்டுகளின் மேல்தான் இருந்தது. கால்பந்து, பாட்மிண்டன் ஆகிய விளையாட்டுகளில் மாவட்ட கிளப் அளவிலான போட்டிகளில் தோனி பங்கேற்று வந்தார்.

* தோனி கால்பந்து விளையாடியபோது அருமையான கோல்கீப்பராக விளங்கினார். அவருடைய பயிற்சியாளர் கேசவ் பானர்ஜியின் கீழ் கோல்கீப்பிங் உத்திகளை நுணுக்கமாகக் கற்றுக்கொண்டார். ஆனால், அதே பயிற்சியாளர்தான் தோனியின் திறமைகளைப் பார்த்து கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாகச் செயல்பட முடியும் என்ற ஆலோசனை கொடுத்து, தோனியைக் கிரிக்கெட் பக்கம் திருப்பிவிட்டார்.

* கிரிக்கெட்டில் நுழைந்து, அதன் மூலம் டிக்கெட் பரிசோதகர் பணியை கோரக்பூர் ரயில் நிலையத்தில் தோனி செய்துவந்தார். அப்போது நடந்த தியோடர் கோப்பையைக் கிழக்கு மண்டல அணி வென்றது. இந்த அணியில் தோனியைச் சேர்த்துக்கொள்ளவில்லை. வழக்கத்துக்கு மாறான அவருடைய பேட்டிங் ஸ்டைலே, அவரை அணியில் சேர்க்காததற்குக் காரணம் என்று கூறப்பட்டது. தன்னுடைய நண்பர் சந்தோஷ் லால் மூலம் கற்றுக்கொண்ட, அவருடைய ஃபேவரைட் ஹெலிகாப்டர் சிக்ஸர் சாகசங்களை அப்போது யாரும் ரசிக்கவில்லை. ஆனால், அதன்பின்பு சற்று அவருடைய பேட்டிங் ஸ்டைலை மாற்றிக்கொண்டபோதும், தனது அதிரடி ஆட்டத்திறனை மாற்றிக்கொள்ளாமல் கிரிக்கெட்டில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

* தோனியின் ஜெர்சி எண் 7 என்பது எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான். ஜூலை 7-ல் பிறந்த அவருடைய கிரிக்கெட் வாழ்வும் 7-ம் எண்ணில்தான் தொடங்கியது. ஆமாம், 2004-ம் ஆண்டில் ஒரு நாள் போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக அறிமுகமானபோது, முதல் போட்டியின் முதல் பந்திலேயே ரன் அவுட் மூலம் அவுட் ஆனார் தோனி. அந்தப் போட்டியில் அவர் 7-ம் வீரராகத்தான் களமிறங்கினார். அன்று தொடங்கியது தோனியின் 7-ம் எண் கிரிக்கெட் வாழ்க்கை. அவர் முதன் முதலில் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டதும் 2007-ம் ஆண்டில்தான்.

* 2007-ல் டி-20 கோப்பை, 2011-உ லகக் கோப்பை கிரிக்கெட், 2013-ல் ஐ.சி.சி. டிராபி என ஐசிசி நடத்திய 3 விதமான தொடர்களிலும் கோப்பை வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே.

* புகழ்பெற்ற ஆஸ்திரேலியா முத்தரப்புத் தொடரில் கோப்பை வென்று காட்டிய ஒரே இந்திய கேப்டன் தோனி. 2008-ம் ஆண்டில் நடந்த தொடரில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்த சாதனை வெற்றியைப் பதிவு செய்தார் தோனி.

* உலகிலேயே மின்னல் வேகத்தில் துல்லியமாக ஸ்டெம்பிங் செய்யும் விக்கெட் கீப்பர்களில் ‘தல’தான் நம்பர் ஒன். மூன்று வடிவங்களிலும் 155 முறை மிக வேகமாக ஸ்டெம்பிங் செய்து அசத்தியிருக்கிறார் தோனி.

* ஒரு நாள் போட்டிகளில் 100 போட்டிகளுக்கு மேல் வெற்றி பெற்று காட்டிய கேப்டன்கள் இதுவரை மொத்தமே மூவர்தான். ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (165 வெற்றி), எம்.எஸ். தோனி (110), ஆலன் பார்டர் (107).

* ஒரு நாள் போட்டிகளில் 200, அதற்கும் அதிகமான போட்டிகளில் கேப்டனாக இருந்தவர்களில் தோனியும் ஒருவர். ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (230 போட்டிகள்), நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளெம்மிங் (218), இந்தியாவின் தோனி (200).

* சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட் ஆகியோருக்கு அடுத்தபடியாக 500-க்கும் மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர் என்ற சிறப்பைப் பெற்றவர் தோனி. இவர் மூன்று வடிவங்களிலும் சேர்த்து 538 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

* மிடில் ஆர்டர் வரிசையில் இறங்கி ஒரு நாள் போட்டியில் 50 சராசரி வைத்திருந்த வீரர்களில் தோனியும் ஒருவர். விக்கெட் கீப்பர்களில் இந்த அளவுக்குச் சராசரி வைத்திருந்த ஒரே வீரர் தோனி மட்டுமே.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x