விராட் கோலி மீது ம.பி. கிரிக்கெட் சங்க உறுப்பினர் சஞ்சய் குப்தா புகார்: விசாரிக்க பிசிசிஐ முடிவு

விராட் கோலி மீது ம.பி. கிரிக்கெட் சங்க உறுப்பினர் சஞ்சய் குப்தா புகார்: விசாரிக்க பிசிசிஐ முடிவு
Updated on
1 min read

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆதாயம் தரும் வகையில் இரட்டைப் பதவி வகிப்பதாக மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்க ஆயுள் உறுப்பினர் சஞ்சய் குப்தா புகார் அளிக்க பிசிசிஐ நன்னடத்தை அதிகாரி டி.கே.ஜெயின் இது குறித்து விசாரிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

கேப்டன் விராட் கோலி கார்னர்ஸ்டோன் வென்ச்சர்ஸ் நிறுவனம் மற்றும் விராட் கோலி ஸ்போர்ட்ஸ் நிறுவனங்களின் இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரது சக இயக்குநர்களான அமித் அருண் சஜ்தே, ( கிரிக்கெட் வட்டாரத்தில் பன்ட்டி சஜ்தே என்று அறியப்படுபவர்) பினாய் பாரத் கிம்ஜி ஆகியோர் டேலண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமான கார்னர்ஸ்டோன் ஸ்போர்ட்ஸ் அண்ட் எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திலும் இயங்கி வருகிறார்கள்.

கோலிக்கு கார்னர் ஸ்டோன் நிறுவனத்தில் எந்தப் பங்கும் இல்லை. ஆனால் இந்த நிறுவனம்தான் கோலி, ரிஷப் பந்த், ஜடேஜா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் ஆகியோரது வணிக நலன்களையும் கவனித்துக் கொள்கிறது.

இதன்படி பிசிசிஐ விதி 38(4)-ஐ விராட் கோலி மீறியுள்ளார். எனவே அவர் ஏதாவது ஒரு பதவியிலிருந்து விலக வேண்டும். இதுதான் புகார்தாரர் சஞ்சய் குப்தாவின் வாதம்.

இது போன்று கேப்டன் ஒருவர் இயக்குநராக இருக்கும் நிறுவனம் பிற வீரர்களின் வணிக ஒப்பந்தங்களையும் கையாள்வதுதான் இந்திய அணித்தேர்வு குளறுபடிகளுக்குக் காரணமாக இருக்க வாய்ப்புள்ளது என்று சில கிரிக்கெட் ஆர்வலர்கள் ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

(-பிடிஐ தகவல்களுடன்...)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in