

கோலியை சீண்ட வேண்டாம் அவரைச் சீண்டினால் நம் பவுலர்களுக்குத்தான் சிக்கலாகி விடும் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் எச்சரித்துள்ளார்.
இந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க இந்திய அணி அங்கு செல்கிறது. கடந்த முறை வாங்கிய அடிக்கு இம்முறை பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது, மும்மூர்த்திகளான வார்னர், ஸ்மித், லபுஷேனை வைத்து இந்தியாவைப் பந்தாட திட்டம் தீட்டி வருகின்றனர்.
இந்தத் தொடர் குறித்தும் விராட் கோலி குறித்தும் ஜோஷ் ஹேசில்வுட் கூறியதாவது:
கோலியுடன் வார்த்தை மோதலில் ஈடுபடப் போவதில்லை. கடந்த முறை இப்படி அவருடன் பேசிதான் அவரை உசுப்பி விட்டு விட்டோம்.
அவரும் அதை விரும்புவார் ஏனெனில் அது அவரில் உள்ள சிறந்ததை வெளிக்கொணர்கிறது. குறிப்பாக அவர் பேட்டிங் செய்யும் போது அவரை வார்த்தைகளால் உசுப்பேற்ற விருமப்வில்லை, அதன் பலனை கடந்த தொடரில் அனுபவித்தோம். பவுலர்களுக்குத்தான் கஷ்டம்.
ஆனால் கோலி பீல்டிங்கில் இருக்கும் போது வேறு கதை. அப்போது வார்த்தைகளை வைத்துச் சீண்டி அவரை அதில் கவனச்சிதறல் கொள்ள வைக்கலாம்.
ஆனால் பேட்டிங்கின் போது நிச்சயம் சீண்டக்கூடாது, சீண்டினால் அவர் சீறி எழுந்து விடுவார், அது பவுலர்களுக்கு பெரிய கஷ்டத்தைக் கொடுத்து விடும்.
பேட்டிங் செய்யும் போது அவரை கொஞ்சம் சுவிட்ச் ஆஃப் செய்து விட்டால் அதன் மூலம் அவரை வீழ்த்தி விடலாம்.
புஜாரா அதே போல் அபாயகரமான வீரர் இவரை அவுட் செய்வது எளிதல்ல. இதையும் கடந்த முறை அனுபவித்தோம்.
இவ்வாறு கூறினார் ஹேசில்வுட்.