

இந்த ஆண்டு 13-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி உள்நாட்டில் நடைபெறாது என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. ஆதலால், வெளிநாட்டில் நடத்த இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) மும்முரமாக இறங்கியுள்ளது.
இந்த ஆண்டு நடக்கும் 13-வது ஐபிஎல் டி20 போட்டியை இலங்கையில் நடத்தலாமா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தலாமா என்பது குறித்த இறுதிக்கட்ட ஆலோசனையில் பிசிசிஐ நிர்வாகிகள் உள்ளனர்.
வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பையும் நடக்க உள்ளது. ஆனால், கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு உலகக்கோப்பை நடத்தலாமா என்பது குறித்து ஐசிசி இறுதி முடிவு எடுக்கவில்லை. அந்த முடிவுக்காக பிசிசிஐ காத்திருக்கிறது. ஒருவேளை உலகக் கோப்பை டி20 போட்டி நடத்துவது கைவிடப்பட்டால் அந்தக் காலகட்டத்தில் ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் நிருபரிடம் கூறுகையில், “உள்நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக வேறு வழியின்றி வெளிநாட்டில் நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு நாடுகள் தேர்வில் உள்ளன. இன்னும் இடம் முடிவாகவில்லை. ஆனால், பெரும்பாலும் வெளிநாட்டில் ஐபிஎல் போட்டி நடத்தவே வாய்ப்புள்ளது.
ஒருசில அணிகள் வந்தால் பரவாயில்லை. 8 அணிகள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும்போது கரோனா வைரஸால் போட்டி நடத்தும் சூழல் ஏதுவாக இல்லை. வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் பாதுகாப்பாக இருக்காது. அப்படியே நடத்தினாலும் ரசிகர்கள் இல்லாமல் நடத்த வேண்டும். அவ்வாறு நடத்த விருப்பமில்லை.
ஆதலால், இலங்கை அல்லது யுஏஇ ஆகிய இரு நாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. விரைவில் அது குறித்து முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
ஐபிஎல் தலைவர் பிரிஜேஸ் படேல் முன்பு அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், “ ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டி நடத்தப்பட்டால் இடம் பிரச்சினையில்லை. இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகள் ஐபிஎல் போட்டியை நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், எங்கள் எண்ணம் இந்தியாவில் நடத்துவதுதான். ஆனால், அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தால்தான் நடத்த முடியும்.
இந்தியாவில் நடத்தினால் நிச்சயம் 3 அல்லது 4 இடங்களுக்கு மேல் நடத்த முடியாது. கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வருவதைப் பொறுத்து அனுமதி கிடைக்கும். இல்லாவிட்டால் வெளிநாட்டில் நடத்தும் வாய்ப்பைத்தான் தேர்வு செய்வோம்” எனத் தெரிவித்திருந்தார்.