Last Updated : 02 Jul, 2020 02:26 PM

 

Published : 02 Jul 2020 02:26 PM
Last Updated : 02 Jul 2020 02:26 PM

கிரிக்கெட் உலகின் கடைசி ‘டபிள்யூ’ (W) மறைந்தது: மே.இ.தீவுகள் ஜாம்பவான் எவர்டன் வீக்ஸ் காலமானார்

மே.இ.தீவுகள் முன்னாள் வீரர் எவர்டன் வீக்ஸ் : கோப்புப்படம்

சர்வதேச கிரிக்கெட் மட்டுமல்லமல், மே.இ.தீவுகள் கிரிக்கெட் வரலாற்றிலும் "3 டபிள்யூ (W)" வீரர்களை யாராலும் மறக்க முடியாது. உலக அணிகளை மிரள வைத்த அந்த 3 டபுள்யூக்களில் இரு டபிள்யூக்கள் ஏற்கெனவே உலகை விட்டு மறைந்துவிட்டனர். எஞ்சிய கடைசி டபிள்யுவும் நேற்று காலமானார்.

உலகக் கிரிக்கெட் ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த அந்த மூன்று டபிள்யூ வீரர்கள் 'சர் கிளைட் வால்காட்', 'சர் ஃபிராங் வோரல்', 'சர் எவர்டன் வீக்ஸ்'. இதில் 1967-ம் ஆண்டு வோரல் மறைந்தார், 2006-ம் ஆண்டு வால்காட் காலமானார். எஞ்சியிருந்த கடைசி டபிள்யூ எவர்டன் வீக்ஸ் தனது 95-வது வயதில் உலகை விட்டு நேற்று பிரிந்தார்.

10 ஆண்டுகள் மட்டுமே எவர்டன் வீக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தாலும் இவரின் பேட்டிங் திறமையைக் கண்டு அஞ்சாத நாடுகளே இல்லை. இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக எவர்டன் கடந்த 1948-1958 காலகட்டத்தில் திகழ்ந்தார்.

1925-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி பர்படாஸ் தீவில் உள்ள வெஸ்ட் பரி எனும் நகரில் ஏழ்மையான குடும்பத்தில் எவர்டன் வீக்ஸ் பிறந்தார். மரத்தினாலான வீட்டில் குடியிருந்த வீக்ஸின் குடும்பம் மிகவும் மோசமான ஏழ்மையில் சிக்கித் தவித்தது. தந்தை டிரினிடாடில் தங்கியிருந்து வேலை செய்து பணம் அனுப்ப அதை வைத்துக் குடும்பம் நடத்தினார்கள். தனது 14-வது வயதில் பள்ளிப் படிப்பைக் கைவிட்ட எவர்டன் வீக்ஸ், வேலைக்குச் சென்றார்.

அப்போது மேற்கிந்தியத் தீவுகளில் வெள்ளை இனத்தவர்கள் ஆதிக்கம் இருந்ததால் அவர்களைத் தவிர மற்றவர்கள் கிரிக்கெட் விளையாடத் தடை இருந்தது. கால்பந்து விளையாட்டில் கவனம் செலுத்திய எவர்டன் வீக்ஸ் பல்வேறு கிளப்புகளில் விளையாடினார். ஆனாலும், எவர்டன் வீக்ஸ் மனம் கால்பந்தில் லயிக்கவில்லை, அவரின் எண்ணம் முழுவதும் கிரிக்கெட்டின் மீதே இருந்தது.

தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடப் பழகிய எவர்டன் வீக்ஸ், உள்ளூர் கிளப்புகளில் விளையாடினார். எவர்டன் வீக்ஸின் பேட்டிங் திறமை, பந்துக்கு ஏற்றார்போல் கால்களை வேகமாக நகர்த்தி ஆடும் திறமை அனைவரையும் கவர்ந்தது. பிற்காலத்தில் திறமையான வீரராக வலம்வரப் போகிறார் என வீக்ஸுடன் விளையாடிய வீரர்கள் கணித்து அவரிடமே தெரிவித்தனர்.

கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மைதானப் பணியாளராகவும், விளையாடும் வீரர்களுக்கு ஃபீல்டிங் செய்பவராக வீக்ஸ் பணியில் சேர்ந்தார். கிடைக்கும் நேரத்தில் வீக்ஸ் பேட்டிங் செய்வதைப் பார்த்த வீரர்கள் மிரண்டுபோயினர். அவரை ஊக்கப்படுத்தவும் செய்தனர்.

அங்கிருந்து வெளியேறிய எவர்டன் வீக்ஸ், பர்படாஸ் ராணுவத்தில் சேர்ந்த பின்புதான் அவரின் திறமை உணரப்பட்டு உயர்தரமான கிரிக்கெட் கிளப்புகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஏறக்குறைய 3 ஆண்டுகள் உள்ளூர் கிரிக்கெட் கிளப்புகளில் விளையாடிய வீக்ஸ் தனது 22-வது வயதில் சர்வதேச கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமானார்.

3 டபிள்யூ வீரர்கள்

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடம் பெற்று 1948-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எவர்டன் வீக்ஸ் அறிமுகமானார்.

பிரையன் லாரா வலது கையில் பேட் செய்தால் எவ்வாறு இருக்குமோ அதைக் காட்டிலும் வேகமாக, எவர்டன் தனது உடலை அசைத்து பேட்டிங் செய்தார்.

எவர்டன் வீக்ஸ் 3-வது வீரராகக் களமிறங்கி எதிரணிகளை தனது பேட்டிங்கால் மிரள வைத்துள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிராக எவர்டன் வீக்ஸ் ஏராளமான சாதனைகளைச் செய்துள்ளார்.

கடந்த 1951-ம் ஆண்டு இங்கிலாந்துப் பயணத்தில் டெஸ்ட் தொடரை மே.இ.தீவுகள் கைப்பற்றி நாடு திரும்பியது. அந்தத் தொடரை வெல்வதற்கு எவர்டன் வீக்ஸ் பேட்டிங் முக்கியக் காரணமாக அமைந்தது. அந்தத் தொடரில் மட்டும் 7 சதங்கள் அடித்தார். அதில் 5 இரட்டைச் சதம், ஒரு முச்சதம் என்பது குறிப்பிடத்தக்து.

கடந்த 1952-53 ஆம் ஆண்டு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த மே.இ.தீவுகள் அணியில் இடம் பெற்ற எவர்டன் வீக்ஸ் 5 சதங்கள் அடித்தார். இந்த தொடரில் வீக்ஸின் சராசரி 102 ரன்களாக இருந்தது. அதேபோல 1955-56 ஆம் ஆண்டு நியூஸிலாந்து தொடரிலும் தொடர்ந்து 3 சதங்கள் அடித்த வீக்ஸ் தனது சராசரியை 83 ரன்களாக வைத்துக்கொண்டார்

எவர்டன் தான் அறிமுகமாகிய நேரத்தில் அதாவது 1948 மார்ச் முதல் டிசம்பர் வரை தான் களமிறங்கிய டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 5 சதங்களை விளாசினார். 6-வது சதம் அடிக்கமுயன்றபோது நடுவரின் தவறான தீர்ப்பால் 90 ரன்களில் எவர்டன் வீக்ஸ் வெளியேறினார். 12 இன்னிங்ஸ்களில் எவர்டன் வீக்ஸ் 1,000 ரன்களைக் கடந்தார்.

டான் பிராட்மேனுக்குப் பின், எவர்டன் வீக்ஸ் போன்று வேகமாக ஆயிரம் ரன்களை இதுவரை எந்த வீரரும் எட்டியதில்லை. எவர்டன் வீக்ஸ் 10 ஆண்டுகள் மட்டுமே கிரிக்கெட் விளையாடினாலும் கிரிக்கெட்டில் கோலோச்சினார்.

எவர்டன் வீக்ஸ் 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,455 ரன்கள் சேர்த்தார். இதில் 15 சதங்கள், 14 அரை சதங்கள் அடங்கும். இவரின் சராசரி 58.61 ரன்கள் ஆகும். இதில் தொடர்ந்து 5 சதங்கள் எவர்டன் அடித்ததை யாராலும் மறக்க முடியாது. 1948-ல் இங்கிலாந்துக்கு எதிராக ஜமைக்காவில் 141, அதன்பின் 128, 194, 162, இந்தியாவுக்கு எதிராக 101 ஆகிய ரன்களை எவர்டன் எடுத்தார்.

சென்னையில் நடந்த போட்டியின்போதுதான் எவர்டன் 90 ரன்கள் சேர்த்திருந்தபோது நடுவர் தவறான ரன் அவுட் வழங்க 6-வது சதம் அடிக்க முடியாமல் சாதனையைத் தவறவிட்டார். அபாரமான பேட்டிங் திறமையால் கடந்த 1951-ம் ஆண்டு விஸ்டனின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக எவர்டன் வீக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

கிரிக்கெட்டிலிருந் ஓய்வு பெற்ற எவர்டன் கனடா நாட்டின் கிரிக்கெட் பயிற்சியாளராக சிறிது காலம் இருந்தார். அதன்பின் பர்படாஸ் அரசியலில் ஈடுபட்டு எம்.பி.யானார். கடந்த 1994-ம் ஆண்டு ஐசிசியின் மேட்ச் ரெப்ரியாக எவர்டன் வீக்ஸ் இருந்தார்.

பழகுவதற்கு எளிமையாகவும், இனிமையாகவும் இருக்கும் எவர்டன் வீக்ஸின் மகனும் சிறந்த கிரிக்கெட் வீரராக வலம் வந்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் ஆன்டி முர்ரே, எவர்டன் வீக்ஸின் மகன் ஆவார்.

எவர்டன் வீக்ஸ் மறைவு குறித்து ஐசிசி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ 3 டபிள்யூகளான கிளைட் வால்காட், ஃபிராங் வோரல் ஆகியோரில் முக்கியமானவரான எவர்டன் வீக்ஸ் காலமானார். இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து அடித்த 39 சதங்கள் அந்தக் காலகட்டத்தில் முக்கியமானவை. உலகக் கிரிக்கெட்டில் மே.இ.தீவுகள் ஆதிக்கம் செய்ய இவர்கள் காரணமாக இருந்தார்கள்” எனத் தெரிவித்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரிக்கி ஸ்கெர்ரிட் பதிவிட்ட கருத்தில், “ மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை எவர்டன் குடும்பத்துக்குத் தெரிவிக்கின்றேன். தலைசிறந்த வீரர், ஜென்டில்மேன். எவர்டன் விளையாடுவதைப் பார்க்க என்னால் முடியவில்லை, ஆனால் அவரின் வீடியோக்களைப் பார்த்து அதிகமாகக் கற்றுக்கொண்டேன்” எனத் தெரிவித்தார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “மே.இ.தீவுகள் ஜாம்பவான் எவர்டன் வீக்ஸ் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த வேதனை அடைந்தேன். பர்படாஸில் நடந்த ஐசிசி கூட்டத்தில் அவரைச் சந்தித்தேன். மேட்ச் ரெப்ரியாக இருந்தபோது அவருடன் நான் பேசியதை இப்போது நினைவுகூர்கிறேன். அவரின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த வருத்தங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x