Last Updated : 26 Sep, 2015 08:03 AM

 

Published : 26 Sep 2015 08:03 AM
Last Updated : 26 Sep 2015 08:03 AM

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் இந்திய அணியின் ஆக்ரோஷ ஆட்டம் தொடரும்: ரவி சாஸ்திரி சூளுரை

தென் ஆப்பிரிக்க அணியில் முன்னணி வீரர்கள் சிலர் ஓய்வு பெற்றிருந்தாலும், அந்த அணி வலுவானதாகவே உள்ளது. அந்த அணிக்கு எதிராகவும் எங்களின் ஆக்ரோஷ ஆட்டம் தொடரும் என இந்திய அணியின் இயக்குனர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 போட்டி கொண்ட டி20 தொடர், 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவை வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் ஆரம்பமாகிறது.

இந்த நிலையில் பெங்களூரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ரவி சாஸ்திரியிடம் தென் ஆப்பிரிக்க அணியில் காலிஸ் போன்ற மூத்த வீரர்கள் ஓய்வுபெற்று விட்டனரே என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு ரவி சாஸ்திரி கூறியதாவது:

சச்சின், வி.வி.எஸ்.லட்சுமண், அனில் கும்ப்ளே ஆகியோர் இன்றி இந்திய அணி விளையாட முடியுமா என்று கேட்பதுபோல் உள்ளது. ஆனால் தென் ஆப்பிரிக்க அணி உலகின் முதல் நிலை அணியாகும். அதற்கு மதிப்பு கொடுத்தாக வேண்டும். தென் ஆப்பிரிக்கா வலுவான எதிரணி. சர்வதேச அளவில் மற்ற அணிகளைவிட தென் ஆப்பிரிக்க அணிதான், அந்நிய மண்ணில் சிறப்பாக ஆடியுள்ளது. அதை புள்ளி விவரங்களே சொல்கின்றன. நம்பர்-1 அணியான தென் ஆப்பிரிக்க அணிக்கு மதிப்பளிக்கிறோம். ஆனால் அதற்காக பின்வாங்கமாட்டோம் என்றார்.

வங்கதேச தொடருக்குப் பிறகு தோனி கிரிக்கெட் விளையாட வில்லை. அதனால் தென் ஆப்பிரிக்க தொடரில் இந்திய அணிக்கு தலைமை வகிப்பதில் தோனிக்கு அசவுகரியம் இருக்குமா என்ற கேள்வியை முற்றிலுமாக மறுத்த ரவி சாஸ்திரி, “அதுபோன்ற எந்தப் பிரச்சினையும் இல்லை. தோனி ஒரு ஜாம்பவான். அவர் இந்திய கிரிக்கெட்டில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் எல்லா காலங்களிலும் ஜாம்பவானாக பார்க்கப்படும் ஒரு வீரர். கேப்டனாகவும் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளார். அவர் கேப்டனாக பொறுப்பேற்றது முதல் தற்போது வரை சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். அதனால் தென் ஆப்பிரிக்க தொடரில் புதிதாக எந்த மாற்றமும் இருக்காது.

ஓர் அணியாக பார்ககும்போது எந்த வித்தியாசமும் இல்லை. தற்போதுள்ள வீரர்கள் தோனியின் கீழ்தான் உலகக் கோப்பையில் விளையாடினார்கள். கடைசியாக வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் தோனி தலைமையில்தான் ஆடினார். அவருடைய தலைமையின் கீழ் சாம்பியன் ஆனார்கள். அப்படி இருக்கும்போது வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என கேள்வியெழுப்பினார்.

தோனியின் பேட்டிங் வரிசையில் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த ரவி சாஸ்திரி, “கடந்த சில ஆண்டுகளாக கடும் சவாலான போட்டிகளில் ஆடியிருக்கும் தோனி, கிரிக்கெட்டை ரசித்து விளையாட வேண்டிய தருணம் இது. நீங்கள் அப்படி நினைக்கவில்லையா? தோனி தனது ஆட்டத்தை ரசித்து விளையாட வாய்ப்பளிக்க வேண்டும். நீங்கள் தலைசிறந்த ஒருநாள் போட்டியின் கேப்டன் மற்றும் வீரரான தோனியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

தோனியைப் பற்றி கவலைப்பட வேண்டாம். போட்டி நடைபெறும் தினத்தைப் பொறுத்து எந்த நிலையில் ஆட வேண்டும் என்பதை அவர் முடிவு செய்வார். இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் தங்களுக்கு ஏதுவான இடத்தில் களமிறங்கும் சூழலில் இல்லை. அவர்கள் எந்த நிலையில் களமிறக்கப்பட்டாலும், அதில் விளையாடுவதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

டெஸ்ட் போட்டியில் 5 பவுலர் களுடன் களமிறங்கும் இந்திய அணியின் உத்தி குறித்துப் பேசிய ரவி சாஸ்திரி, “அது நிலையான திட்டம் இல்லை. விளையாடும் மைதானம், எதிரணி ஆகியவற்றைப் பொறுத்து அது மாறுபடும். போட்டி நடைபெறும் சூழலுக்கு மரியாதை அளித்தாக வேண்டும். கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தவரையில் நான் இந்த மாதிரியான அணியோடுதான் செல்வேன் என நீங்கள் கூற முடியாது. அப்படி நினைத்தால் போட்டி நடைபெறும் ஆடுகளத்தின் சூழல் வித்தியாசமானதாக இருந்தால், நீங்கள் எடுக்கும் முடிவு உங்களுக்கு எதிரானதாகிவிடும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x