மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: வட கொரியாவை பந்தாடியது இந்தியா; 13-0 என்ற கோல் கணக்கில் வென்றது

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: வட கொரியாவை பந்தாடியது இந்தியா; 13-0 என்ற கோல் கணக்கில் வென்றது
Updated on
1 min read

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 என்ற கோல் கணக்கில் வட கொரியாவை தோற்கடித்தது. இதில் இந்திய கேப்டன் ராணி ராம்பால் 5 கோல்களை அடித்து அசத்தினார்.

7-வது மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி சீனாவின் சாங்ஸவ் நகரில் நேற்று தொடங்கியது. உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிச்சுற்றான இந்தப் போட்டியில் இந்திய அணி, வட கொரியாவை எதிர்கொண்டது.

இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியில் பிரீத்தி துபே 11-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து கோல் மழையைத் தொடங்கி வைத்தார்.

20-வது நிமிடத்தில் ஜஸ்பிரித் கவுர் பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோலடிக்க, 24-வது நிமிடத்தில் இந்தியாவின் 3-வது கோலை அடித்தார் நவ்னீத் கவுர். 28-வது நிமிடத்தில் இந்திய கேப்டன் ராணி ராம்பால் கோலடிக்க, வட கொரியா நெருக்கடிக்கு உள்ளானது.

31-வது நிமிடத்தில் வட கொரியாவின் பின்கள வீராங்கனைகளை வீழ்த்தி லில்லி கோலடிக்க, அதைத்தொடர்ந்து பூனம் பர்லா மற்றொரு கோலை அடித்தார்.

இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் 6-0 என முன்னிலை பெற்றது இந்தியா.

2-வது பாதி ஆட்டத்திலும் அசத்தலாக ஆடியது இந்திய அணி. ராணி ராம்பால் தொடர்ச்சியாக 3 கோல்களை (43, 44, 46-வது நிமிடங்களில்) அடிக்க, இந்தியா 9-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதன்பிறகு 51-வது நிமிடத்தில் லில்லிமாவும், 52-வது நிமிடத்தில் ராணி ராம்பாலும், 64-வது நிமிடத்தில் பிரீத்தி துபேவும், 69-வது நிமிடத்தில் நவ்னீத் கவுரும் கோலடிக்க, இந்தியா 13-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

சிங்கப்பூருடன் மோதல்

இன்று நடைபெறும் ஆட்டத் தில் சிங்கப்பூரை சந்திக்கிறது இந்தியா. இந்த ஆட்டம் பிற் பகல் 2.30 மணிக்கு தொடங்கு கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in