

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சவாலான நீண்ட தொடரை அடுத்து பெங்களூருவில் தயாரிப்பு முகாம் நடைபெற்று வருகிறது. ஷிகர் தவண், தோனி, மொகமது ஷமி ஆகியோர் வலைப்பயிற்சியில் நீண்ட நேரம் ஈடுபட்டு கடுமையான பயிற்சி மேற்கொண்டனர்.
புதன் கிழமையன்று வலைப்பயிற்சியில் ஈடுபட்ட இந்திய ஒருநாள் அணி கேப்டன் அடுத்தடுத்து பெரிய பெரிய ஷாட்களை ஆடினார். ரவிசாஸ்திரி அவரது ஆட்டத்தை தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு நீண்ட நேரம் தோனியுடன் ரவிசாஸ்திரி உரையாடினார்.
இத்தனையாண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட்டில் உலகின் தலைசிறந்த பினிஷர் பணியைச் செய்து கொண்டிருந்த தோனி இனி 4-ம் நிலையில் களமிறங்கவுள்ளதாக தெரிகிறது. ரவிசாஸ்திரி கூறியிருப்பதும் சூசகமாக இதனை உணர்த்துகிறது:
"இதற்கான நேரம் வந்து விட்டது என்று தோன்றவில்லியா? எவ்வளவோ ஆண்டுகள் அவர் பின்னால் இறங்கி அணியின் சுமையை தன் தோள்களில் சுமந்துள்ளார். எனவே அவர் தனது பேட்டிங்கை முழுமையாக மகிழ்ச்சியுடன் ஆட வாய்ப்பளிக்க வேண்டாமா?
மிகச்சிறந்த ஒரு கேப்டன் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம், நான் இந்திய அணியை மட்டும் குறிப்பிடவில்லை, உலக கிரிக்கெட்டிலேயே தோனிக்கு ஈடு கிடையாது. அவரது சாதனைகளை எடுத்துப் பாருங்கள். குறைந்த ஓவர் போட்டிகளில் அவர் சாதித்தவற்றை எண்ணிப்பார்க்கும் போது ஒருவரும் அவர் அருகில் கூட நிற்க முடியாது” என்றார்.
காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள மொகமது ஷமி, தனது வழக்கமான ரன்-அப்-ஐ மேற்கொண்டு பந்து வீசினார். சுமார் 1 மணி நேரம் வலைப்பயிற்சியில் வேர்க்க விறுவிறுக்க அவர் பயிற்சி செய்தார்.
வியர்வை பிசுபிசுக்க பயிற்சி செய்த மற்றொரு வீரர் ஷிகர் தவண். இவரும் காயத்தின் அறிகுறி இல்லாமல் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். வரும் ஞாயிறன்று பெங்களூருவில் நடைபெறும் வங்கதேச ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ கேப்டனாக ஷிகர் தவண் களமிறங்குகிறார்.
இசாந்த் சர்மா, வருண் ஆரோன் ஆகியோரும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
அயல்நாட்டில் 2006-ற்குப் பிறகு ஒரு டெஸ்ட் தொடரைக்கூட இழக்காத தென் ஆப்பிரிக்க அணியின் சவாலைச் சந்தித்து வீழ்த்த இந்திய அணி தயாராகி வருவதாகவே தெரிகிறது. அனைத்திற்கும் மேலாக வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் பெற்ற தோல்விகளுக்கு ஈடுகட்டும் விதமாக தென் ஆப்பிரிக்காவை ஒருநாள் தொடரில் வீழ்த்த தோனியும் தயாராகி வருவதாகவே தெரிகிறது.
4-ம் நிலையில் தோனி களமிறங்குவது என்பது எதிரணியினருக்கு பெரிய அச்சத்தை ஏற்படுத்தும் என்று நம்பலாம், ஏனெனில் அவர் நின்று ஒன்று, இரண்டு என்று எடுத்து ரன் விகிதத்தை இலக்குக்கு தோதாகக் கொண்டு செல்ல முடிவதோடு, அவ்வப்போது பெரிய ஷாட்களையும் ஆடக்கூடியவர் மேலும் கடைசி வரை நின்றால் எந்த ஒரு வெற்றி இலக்கும் தோனியைப் பொறுத்தவரை கைப்பிடி மண்ணே. எனவே 4-ம் நிலையில் தோனி என்பது மிகப்பெரிய மாற்றத்தை எதிர்நோக்குவது.