

உலகின் முன்னணி நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ஜோகோவிச்- க்கு கரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் காரணமாக உலக முழுவதும் நடைபெறவிருந்த முக்கிய நிகழ்வுகளும், விளையாட்டு போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையிலும் சில நாடுகளில் கரோனோவுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள் அதற்கான பாதுகாப்புடன் நடத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்ற அட்ரியா டூர் என்ற டென்னிஸ் தொடர் செர்பியா குரோஸியா ஆகிய நாடுகளில் நடத்தப்பட்டது.
இப்போட்டிகளை காண ரசிகர்கள் குவிந்தது சர்வதேச அளவில் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில் அந்தத் தொடரில் கலந்து கொண்ட வீரரகளுக்கு சில நாட்களாக கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து தொடர் ரத்து செய்யபடுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்தத் தொடரில் கலந்து கொண்ட ஜோகோவிச்சுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குரேஷியாவில் இருந்து வருகை தந்த ஜோகோவிச்சுக்கும், அவரது மனைவிக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜோகோவி கூறும்போது, “ இந்த தொடரின் வாயிலாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த சூழல் அவர்களின் உடல் நலத்தில் சிக்கலை ஏற்படுத்தாது என்றும் அவர்கள் விரைவில் நலம் பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன். எனக்கு கரோனாவுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. நான் 14 நாட்கள் என்னை தனிமைப்படுத்திக் கொள்ள இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.