

சமீபத்திய அயல்நாட்டு தொடர்கள் வீரர்களிடத்தில் நட்புறவையும் பிணைப்பையும் வலுப்படுத்தியது என்று இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் தெரிவித்தார்.
ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்போ இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
அயல்நாடுகளில் ஆடிய தொடர்கள் எங்களுக்குள் பிணப்பை வலுப்படுத்தியது. எங்களுடைய சிந்தனை முறை ஒன்றாக உள்ளது. அனைவரும் ஒரே திசையில் பயணிக்க விரும்புகிறோம். இவ்வாறாக அயல்நாட்டுத் தொடர்கள் சில நல்ல விஷயங்களை எங்களுக்கு அளித்தது. தோல்வி ஏற்பட்டாலும் சூழ்நிலையில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை. ஒருவரும் அவ்வளவுதான், இனி எழும்புவது கடினம் என்று யோசிப்பதில்லை. எதுவாக இருந்தாலும் அடுத்த கணத்திலிருந்து நாம் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும் என்ற மன நிலையை பெற்றுள்ளோம்.
ஏனெனில் அனைவரது எண்ண அலைகளும் ஒன்றாக உள்ளது, அனைவரும் சமவயதினராக இருக்கிறோம். ஒரு அணியாக இப்போது இறுக்கமாக பிணைந்துள்ளோம். உள்ளூரிலிருந்து தள்ளியிருப்பது எங்களை வலுப்படுத்தியது.
அணியில் ஒவ்வொருவரும் ஆற்றல் படைத்தவர்களாக இருக்கிறோம். ஒரு ஆரோக்கியமான போட்டி அணியில் நிலவுகிறது. இது பரஸ்பர பாராட்டுதல் மூலம் போட்டி மனப்பான்மை நல்ல முடிவுகளை அளிக்கிறது. ஷிகர் தவண் ரன்கள் எடுத்தால் நான் அவரைப் பாராட்டத் தயங்குவதில்லை. அவரும் எனக்கு அதனை திரும்ப வழங்குகிறார். அனைவரும் ஒரே காரணத்தை நோக்கி கவனம் செலுத்துவதே இதற்குக் காரணம்.
பயிற்சியாளர்கள் குழு (ரவி சாஸ்திரி, பி.அருண், ஆர்.ஸ்ரீதர், சஞ்சய் பாங்கர்) ஆகியோர் நல்ல ஓய்வறைச் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தனர், ஓய்வறையில் நான் மகிழ்ச்சியாக இருந்தால்தான் மைதானத்தில் நான் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று கருதுகிறேன்.
ரவிசாஸ்திரி இந்த விஷயத்தில் 100% கச்சிதமானவர். சரியான நேரத்தில் அவர் அணியிடத்தில் வந்து சேர்ந்துள்ளார் என்றே நான் கருதுகிறேன். அனைவருமே எங்களுக்கு ஒரு நல்ல சூழலை ஏற்படுத்திக் கொடுக்க பாடுபடுகின்றனர்.
தென் ஆப்பிரிக்க தொடரை உற்சாகத்துடன் எதிர் நோக்குகிறேன். ஒரே விஷயம் எனது உடல் தகுதி. நான் அதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன். இப்போது நல்ல உடல்நிலையில் இருக்கிறேன்.
இலங்கையில் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடமுடியாமல் போனது எனக்கு கடினமான காலம். ஆனால் போனதை நினைத்து என்ன செய்ய முடியும்? தற்போது எனது பேட்டிங் அடிப்படைகளை வலுப்படுத்தி வருகிறேன், உடல் தகுதி, பீல்டிங் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்துகிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார் முரளி விஜய்.