கோலி அற்புதமான நபர், நாங்கள் இருவருமே களத்தில் கடுமையாக ஆடுபவர்கள்: ஸ்டீவ் ஸ்மித்

கோலி அற்புதமான நபர், நாங்கள் இருவருமே களத்தில் கடுமையாக ஆடுபவர்கள்: ஸ்டீவ் ஸ்மித்
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி அற்புதமான நபர் என்றும், தாங்கள் இருவருமே களத்தில் ஆடும்போது கடுமையாக இருப்போம் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் ஸ்வீட் ஸ்மித் கூறியுள்ளார்.

இந்தியாவின் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் இருவருமே சம காலத்தின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக அறியப்படுபவர்கள். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் விளையாட்டிலிருந்து 12 மாதங்கள் நீக்கப்பட்டும் மீண்டும் ஆட வந்த ஸ்மித்துக்கு ஆதரவு தனத வீரர்களில் கோலி முக்கியமானவர்.

ஸ்மித்தும் கோலி குறித்து பல சூழலில் பாராட்டிப் பேசியுள்ளார். சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் ஸ்டீவ் ஸ்மித், "களத்துக்கு வெளியே நான் அவரிடம் ஒரு சில சமயம் பேசியிருக்கிறேன். சமீபத்தில் இந்தியாவில் நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து செய்தி அனுப்பியிருந்தேன். அவர் ஒரு அற்புதமான நபர். நாங்கள் இருவரும் எங்களின் அணிகளுக்காக களத்தில் கடுமையாக ஆடுபவர்கள். அது ஆட்டத்தின் ஒரு பகுதியே.

உலகக் கோப்பை ஆட்டத்தின் போது என்னையும், டேவிட் வார்னரையும் கிண்டல் செய்த இந்திய ரசிகர்களை அமைதி காக்கும்படி விராட் சொன்னதற்கு நான் அன்றே அவரிடம் நன்றி பாராட்டிப் பேசினேன். இந்திய அணியை அவர் நடத்தி வரும் விதம் அற்புதமாக இருக்கிறது.

அவரது பேட்டிங் திறமையும் அசாத்தியமானது. மூன்று விதமான கிரிக்கெட் ஆட்டங்களிலும் அவர் மிகத் திறமையானவர். வரும் காலங்களில் அவர் பல சாதனைகளை முறியடிக்கப்போவதை நாம் பார்ப்போம். அவருக்கு ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற பசி இருக்கிறது. அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதை சேர்க்க முடியாது என்று நம்புகிறேன். அப்படி நடந்தால் நன்றாக இருக்கும்.

ஒரு கேப்டனாக இந்தியாவை டெஸ்ட் உலகில் முதலிடம் பிடிக்கச் செய்தார். அவர் ஆரோக்கியத்துக்கு அதிக கவனம் கொடுக்கிறார் என்பது தெரிகிறது. இந்தியா அற்புதமான அணி. இந்த வருடம் அவர்கள் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் வருவது விசேஷமானதாக இருக்கும். அதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்" என்று ஸ்மித் கூறியுள்ளார்.

இந்திய அணி அக்டோபர் மாதத்திலிருந்து ஜனவரி வரை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. இதில் 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடவுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in