

ஜூன் 20, 1996-ம் ஆண்டு, இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் இருவரான சவுரவ் கங்குலியும், ராகுல் திராவிட்டும், இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் தங்கள் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினர்.
இந்த ஆட்டத்தில் கங்குலி சதமடித்தார். திராவிட் துரதிர்ஷ்டவசமாக 95 ரன்களில் ஆட்டமிழந்தார். இதுபற்றி தற்போது இருவரும் நினைவுகூர்ந்துள்ளனர்.
"கங்குலி 3-வதாக களமிறங்கினார். நான் 7-வதாக ஆடினேன். எனவே கங்குலி ஆடுவதைப் பார்க்க எனக்கு நீண்ட நேரம் கிடைத்தது. அவர் சதமெடுத்ததில் எனக்கு மகிழ்ச்சியே. எனக்குத் தனிப்பட்ட முறையில், நானும் இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று இருந்தது. எனவே அவர் ஆட்டமிழந்தபோது அதை எனக்குச் சிறிய ஊக்கமாக, அவர் ஆட்டத்தை ஒரு உந்துதலாக எடுத்துக் கொண்டேன்" என்று திராவிட் கூறியுள்ளார்.
இந்த ஆட்டத்தில் 131 ரன்களுக்கு வெளியேறிய கங்குலி பேசுகையில், "உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் ஆடும்போது எனது ஆட்டத்தில் மட்டும்தான் முழு கவனமாக இருந்தேன். திராவிட் ஆடக் களமிறங்கியபோது நான் 70 ரன்கள் வரை ஏற்கெனவே சேர்த்திருந்தேன். சதமெடுக்க நான் அடித்த ஷாட் எனக்கு நினைவில் இருக்கிறது. பாயிண்ட் பக்கம் கவர் ட்ரைவ் அடித்தேன். நான் தேநீர் இடைவேளைக்கு ஒரு மணி நேரத்துக்குப் பின் ஆட்டமிழந்தேன். அதன் பின் திராவிட் தொடர்ந்தார்.
அடுத்த நாள் காலை ஆட்டத்தைத் தொடர்ந்த திராவிட் 95 ரன்கள் எடுத்தார். நான் லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில், அவர் சதமெடுப்பார் என்று நம்பி நின்று கொண்டிருந்தேன். அவர் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் கிரிக்கெட் ஆடும்போது பார்த்திருக்கிறேன். இணைந்து ரஞ்சிக் கோப்பை விளையாடியுள்ளோம். ஒருநாள் போட்டியில் ஈடன் கார்டன் மைதானத்தில் அவரது முதல் ஆட்டத்தை நான் பார்த்திருக்கிறேன். அன்று லார்ட்ஸில் ஆடும்போது பார்த்தேன். அவர் கிரிக்கெட் வாழ்க்கையை நான் பக்கத்திலிருந்து பார்த்திருக்கிறேன். நாங்கள் இருவருமே அன்று சதமெடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்று கங்குலி நெகிழ்ச்சியாகப் பகிர்ந்துள்ளார்.
மொத்தம் 113 டெஸ்ட் போட்டிகளிலும், 311 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியிருக்கும் கங்குலி முறையே 7,212 மற்றும் 11,363 ரன்களைச் சேர்த்துள்ளார். ராகுல் திராவிட் 162 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 13,288 ரன்களையும், 344 ஒருநாள் போட்டிகளில் ஆடி 10,899 ரன்களையும் சேர்த்துள்ளார்.