

தான் நினைத்ததை விட சீக்கிரமாகவே ஓய்வு பெற்றதன் காரணம் தனது கால் மூட்டுப் பிரச்சினைதான் என்றும், மேலும் ஜாகீர் கான், ஆஷிஷ் நேஹ்ரா போன்ற புதிய வீரர்கள் வளர வேண்டும் என்று நினைத்ததாகவும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் கூறியுள்ளார்.
இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளிலும், 229 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியிருக்கும் ஜவகல் ஸ்ரீநாத், கபில் தேவுக்குப் பிறகு அணிக்குக் கிடைத்த வேகப்பந்து வீச்சாளராகப் பார்க்கப்படுகிறார். சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் அளித்த பேட்டியில், தான் ஓய்வு பெற்றதன் காரணத்தைப் பகிர்ந்துள்ளார்.
"எனது கைகளும், கால் மூட்டும் சோர்ந்துவிட்டிருந்தன. அந்த நேரத்தில் ஜாகீர், ஆஷிஷ் ஆகியோர் இருந்தனர். நான் விளையாடினால் அதில் ஒருவருக்குத்தான் வாய்ப்புக் கிடைத்தது. கபில் தேவ் மற்றும் மனோஜ் பிரபாகர் ஆகியோர் அணியில் இருந்தபோதும் நானும் இதே நிலையை எதிர்கொண்டேன். சில நேரங்களில் ஆட்டத்தில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இடம்பெறுவார்கள்.
எனக்கு இந்தியக் களங்களில் வீசுவது கடினமாக மாறியது. ஏற்கெனவே வயது 33-ஐ எட்டியிருந்தது. இன்னும் ஒரு வருடம் விளையாடியிருக்கலாம். ஆனால், என் மூட்டுப் பிரச்சினை தீவிரமடைந்தது. அப்போது நம் அணியில் இன்னும் 2-3 வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து இருந்திருக்க வேண்டும். வெங்கடேஷ் பிரசாத் 5-6 வருடங்கள் இருந்தார். ஆனால், வீரர்கள் மாறிக்கொண்டே இருந்தனர். அப்படி நடக்கும்போது பந்துவீச்சுத் திறன் குறையும்.
பிறகு ஜாகீர் கானும், ஆசிஷ் நேஹ்ராவும் வந்தனர். குறைந்த நேரத்தில் வளர்ந்தனர். அப்போது நம் அணிக்கு நல்ல பலன் கிடைத்தது. சுழற்பந்து வீச்சில் கும்ப்ளேவும், ஹர்பஜனும் இணைந்து கலக்கினார்கள். வேகப்பந்துவீச்சில் அப்படி ஒரு இணை இல்லாமல் போன குறையை அதிகமாக உணர்ந்தோம்" என்று ஸ்ரீநாத் கூறியுள்ளார்.