

இருநாட்டு உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில் இந்திய அணி டிசம்பரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாட பாகிஸ்தான் எதிர்பார்த்து வருகிறது.
2015-2023 இடையே குறைந்தது 6 தொடர்களை விளையாட இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. ஆனால் இதற்கு இந்திய அரசின் ஒப்புதலுக்காக பிசிசிஐ காத்திருக்கிறது.
இந்நிலையில், லாகூரில் பாகிஸ்தான் அணியின் பயிற்சி முகாம்ல் ஷாகித் அப்ரீடி கூறும்போது, “நாம் ஏன் மீண்டும் மீண்டும் இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்காக போராட வேண்டும்? அவர்களுக்கு நம்மை எதிர்த்து விளையாட விருப்பமில்லை எனில் அவர்களுடன் விளையாடுவதற்கு நமக்கும் எந்த ஒரு காரணமும் இல்லை.
நாம் அவர்களுக்கு அழைப்பு விடுத்தோம். அவர்கள் விளையாட விரும்பவில்லை எனில் கவலை ஏன்? நாம் இந்தியாவுடன் விளையாடாவிட்டாலும் மகிழ்ச்சியாகவே இருப்போம்.
இந்தியாவை விடுத்து பிற வெளிநாட்டு அணிகளை இங்கு வந்து விளையாட வைக்க நாம் முயற்சிகளை மேற்கொள்வதே நல்லது” என்றார்.