Published : 01 Sep 2015 10:02 AM
Last Updated : 01 Sep 2015 10:02 AM

பின்வரிசை பேட்ஸ்மேன்கள் அபாரம்: 3-வது டெஸ்ட்டில் வெற்றி பாதையில் இந்தியா- இலங்கை-67/3; வெற்றிக்கு இன்னும் 319 ரன்கள்

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.

386 ரன்கள் என்ற இலக்குடன் 2-வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றி பெற இன்னும் 319 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. இதன்மூலம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை நெருங்கியிருக்கிறது இந்தியா. முன்னதாக 1993-ல் அசாருதீன் தலைமையிலான இந்திய அணி, இலங்கை மண்ணில் 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 100.1 ஓவர்களில் 312 ரன்களும், இலங்கை 52.2 ஓவர்களில் 201 ரன்களும் குவித்தன. முதல் இன்னிங்ஸில் 111 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்தியா 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 8.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித் சர்மா 14, கோலி 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

ரோஹித் அரை சதம்

4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் கோலி நிதானமாக ஆடியபோதும், ரோஹித் சர்மா ஓரளவு வேகமாக ரன் சேர்த்தார். இந்தியா 64 ரன்களை எட்டியபோது கோலி 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஸ்டூவர்ட் பின்னி களமிறங்கினார். வந்த வேகத்தில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கிய பின்னி, தொடர்ந்து பவுண்டரிகளை விரட்டி ஆட்டத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தினார்.

25 ரன்களில் இருந்தபோது ஸ்டெம்பிங் மூலம் ஆட்டமிழப்பதி லிருந்து தப்பிய பின்னி, அதன்பிறகும் வேகத்தைக் குறைக்காமல் விளையாடினார். மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக 71 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் அரை சதம் கண்ட ரோஹித் சர்மா, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 54 ரன்கள் சேர்த்தது. பின்னியின் அதிரடியால் இந்த ஜோடி 60 பந்துகளிலேயே 50 ரன்களை எட்டியது குறிப்பிடத்தக்கது.

ஸ்டூவர்ட் பின்னி 49

இதையடுத்து ஸ்டூவர்ட் பின்னியுடன் இணைந்தார் நமன் ஓஜா. இந்த ஜோடி சிறப்பாக ஆட, 150 ரன்களைக் கடந்தது இந்தியா. அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டூவர்ட் பின்னி 49 ரன்களில் ஆட்டமிழக்க, அமித் மிஸ்ரா களம்புகுந்தார். முதல் இன்னிங்ஸைப் போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் அவர் நேர்த்தியாக ஆட, 63 பந்துகளைச் சந்தித்த நமன் ஓஜா 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்திருந்தது.

அஸ்வின் 58

இதையடுத்து மிஸ்ராவுடன் இணைந்தார் அஸ்வின். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்தது. மிஸ்ரா 39 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டானார். இதன்பிறகு உமேஷ் யாதவ் கள மிறங்க, மறுமுனையில் வேகம் காட்டிய அஸ்வின் 76 பந்துகளில் அரைசதம் கண்டார். உமேஷ் யாதவ் 4 ரன்களில் வெளியேற, கடைசி விக் கெட்டாக அஸ்வின் 87 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இந்தியாவின் இன்னிங்ஸ் 76 ஓவர்களில் 274 ரன்களோடு முடிவுக்கு வந்தது. இலங்கை தரப்பில் தமிகா பிரசாத், நுவான் பிரதீப் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

386 ரன்கள் இலக்கு

இதையடுத்து 386 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி, இஷாந்த் சர்மா வீசிய முதல் ஓவரிலேயே தரங்காவின் (0) விக்கெட்டை இழந்தது. பின்னர் வந்த கருணா ரத்னா ரன் ஏதுமின்றியும், சன்டிமல் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 7 ஓவர்களில் 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை.

3-வது விக்கெட்டுக்கு இணைந்த ஜே.கே.சில்வா-கேப்டன் மேத்யூஸ் ஜோடி மேலும் விக்கெட் எதுவும் விழாமல் பார்த்துக் கொண்டது. 4-வது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் சேர்த்துள்ளது. ஜே.கே.சில்வா 24, மேத்யூஸ் 22 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியத் தரப்பில் இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இலங்கையின் கைவசம் இன்னும் 7 விக்கெட்டுகளே உள்ளன. வெற்றி பெறுவதற்கு இன்னும் 319 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. ஏறக்குறைய இலங்கையின் தோல்வி உறுதியாகிவிட்டது. எனினும் மழை வாய்ப்புள்ளதால் இந்திய அணி காலையிலேயே, இலங்கையின் விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சிக்கும்.

விக்கெட் வீழ்ச்சி:

1-1 (தரங்கா), 2-2 (கருணாரத்னே), 3-21 (சன்டிமல்).

பந்துவீச்சு:

இஷாந்த் சர்மா 7-2-14-2, உமேஷ் யாதவ் 5-1-32-1, ஸ்டூவர்ட் பின்னி 4-1-13-0, அமித் மிஸ்ரா 2-0-2-0, அஸ்வின் 0.1-0-4-0.

விக்கெட் வீழ்ச்சி:

1-0 (புஜாரா), 2-2 (ராகுல்), 3-7 (ரஹானே), 4-64 (கோலி), 5-118 (ரோஹித்), 6-160 (பின்னி), 7-179 (ஓஜா), 8-234 (மிஸ்ரா), 9-269 (உமேஷ்), 10-274 (அஸ்வின்).

பந்துவீச்சு:

தமிகா பிரசாத் 19-3-69-4, நுவான் பிரதீப் 17-2-62-4, ரங்கனா ஹெராத் 22-0-89-1, ஏஞ்செலோ மேத்யூஸ் 6-3-11-0, தரின்டு கவுஷல் 12-2-41-0.

சாதனைத் துளிகள்...

8/169

இந்தப் போட்டியில் (இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து) 169 ரன்களைக் கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் தனது சிறப்பான பந்துவீச்சைப் பதிவு செய்தார் இலங்கையின் தமிகா பிரசாத்.

1

இரண்டாவது இன்னிங்ஸில் முதல்முறையாக அரை சதமடித்துள்ளார் ரோஹித் சர்மா.

1953

10 அல்லது அதற்கு குறைவான ரன்களுக்கு முதல் 3 விக்கெட்டுகளை இழந்தபிறகு 4-வது மற்றும் 5-வது விக்கெட்டுக்கு இந்தியா 50 ரன்களுக்கு மேல் சேர்த்தது 1953-க்குப் பிறகு இதுவே முதல்முறையாகும்.

98

இந்தப் போட்டியில் (இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து) அமித் மிஸ்ரா 98 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் 8-வது பேட்ஸ்மேனாகவோ அல்லது அதற்கு கீழோ களமிறங்கி அதிக ரன்கள் அடித்தவர்கள் வரிசையில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

1

நேற்றைய போட்டியில் இந்திய அணியில் 5 முதல் 9-வது நிலை வரையிலான 5 பேட்ஸ்மேன்கள் தலா 30 ரன்களுக்கு மேல் எடுத்தனர். டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் 5 முதல் 9-வது வரையிலான 5 பேட்ஸ்மேன்கள் 30 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுப்பது இதுவே முதல்முறை யாகும்.

326

கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் 1998-ல் ஜிம்பாப்வேக்கு எதிராக இலங்கை அணி 326 ரன்களை துரத்திப் பிடித்ததே இதுவரை சாதனையாக உள்ளது.

இஷாந்த்-பிரசாத் மோதல்

டெஸ்ட் போட்டியில் ஓவருக்கு இரு பவுன்சர்களை வீசலாம். ஆனால் 76-வது ஓவரை வீசிய இலங்கை வீரர் தமிகா பிரசாத் தொடர்ச்சியாக 4 பவுன்சர்களை விளாசியதால் கோபமடைந்த இஷாந்த் சர்மா, ரன் எடுக்க ஓடியபோது, தனது ஹெல்மெட்டில் கையால் அடித்துக் கொண்டே எனது தலையில் பந்தை வீசுங்கள் என தமிகா பிரசாத்தை நோக்கி சைகை செய்தார்.

இஷாந்த் மறுமுனையை அடைந்த தும் அவரிடம் பிரசாத்தும், சன்டிமலும் வாக்குவாதத்தில் ஈடுபட நடுவர்கள் குறுக்கிட்டு சமாதானம் செய்தனர். அதே ஓவரில் அஸ்வின் ஆட்டமிழக்க, இஷாந்த் பெவிலியனை நோக்கி ஓடினார். அப்போது பிரசாத்தும் அவரை பின்தொடர்ந்து ஓட பரபரப்பு ஏற்பட்டது. எனினும் பிரச்சினையும் ஏதும் ஏற்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x