

ஐபிஎல் சூதாட்டத்தில் சிக்கி தடை 7 ஆண்டுகள் விதிக்கப்பட்ட இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் இந்த ஆண்டு ரஞ்சி ட்ராபி கிரிக்கெட் போட்டியில் ஆட வாய்ப்புள்ளதாக கேரள பயிற்சியாளரும் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளருமான டினு யோகானன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீசாந்த் சிறந்த ஸ்விங் பவுலரான இவருக்கு வயது 37. 27 டெஸ்ட்போட்டிகளில் 87 விக்கெட்டுகளையும் 53 ஒருநாள் போட்டிகளில் 75 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 2007 உலகக்கோப்பை டி20-யில் இவரது பங்களிப்பு பெரிது. 2013 ஐபிஎல் தொடரில் ஸ்பாட் பிக்சிங்கில் சிக்கி 7 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டார்.
இவரது தடைகாலம் வரும் செப்டம்பரில் முடிவடைவதால் இவர் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் ஆட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இது குறித்து கேரள அணியின் பயிற்சியாளர் டினு யோகானன் கூறும்போது, “இந்த ஆண்டு ரஞ்சி கிரிகெட்டில் ஸ்ரீசாந்த் விளையாட வாய்ப்புள்ளது.
இவர் மீண்டும் கேரளா அணிக்காக ஆடினால் நல்லது, ரசிகர்களும் அதனை விரும்புகின்றனர். உடற்தகுதியுடன் இருந்தால் அவர் ஏன் விளையாடக் கூடாது. இவரது திறமை நன்கு அறியப்பட்டதே. எனவே உடற்தகுதி மட்டுமே போதுமானது” என்றார் டினு யோகானன்.