

சீன நிறுவனமான விவோ தொடர்ந்து ஐபிஎல் ஸ்பான்சர்களாக நீடிப்பார்கள் என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.
இந்திய -சீன எல்லையில் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் கல்வான் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் எய்த, காயமடைந்த பல வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று குரல்கள் நாட்டில் வலுத்து வருகின்றன. இந்நிலையில் பணமழை டி20 தொடரான ஐபிஎல் தொடரின் ஸ்பான்சர்களாக சீன நிறுவனம் விவோ நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் நீடிக்கும் என்கிறார் பிசிசிஐ பொருளாளர் அருண் துமால்.
இவர் தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றிடம் கூறும்போது, “நாங்கள் இதுபற்றி எதுவும் தீர்மானிக்கவில்லை. சீன நிறுவனங்களுக்கு உதவுதல் என்பதற்கும் சீனநிறுவனத்திடமிருந்து பயன்பெறுவதற்குமான வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய நுகர்வோரிடமிருந்து சீன நிறுவனம் பணம் சம்பாதிக்கிறது, அதில் ஒரு பங்கை பிசிசிஐக்கு ஐபிஎல் ஸ்பான்சர்களாகச் செலுத்துகிறார்கள்.
அவர்களிடமிருந்து பெறும் பணத்திற்கு பிசிசிஐ 42% வரி செலுத்துகிறது. எனவே இது நம் நாட்டுக்கு சாதகமானதுதானே தவிர சீனாவுக்குச் சாதகமானதல்ல” என்று துமால் தெரிவித்தார்.
விவோ நிறுவனம் ஐபிஎல் ஸ்பான்சரை 5 ஆண்டுகளுக்கு ரூ.2,199 கோடிக்குப் பெற்றது குறிப்பிடத்தக்கது.