

கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் எய்தியதைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியின் மருத்துவர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தினால் அவரை நீக்கி உத்தரவிட்டது சிஎஸ்கே நிர்வாகம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி இந்திய ராணுவத்தின் கவுரவ லெப்டினெண்ட் ஆவார். இந்நிலையில் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் எய்தியதை தனது ‘மோசமான ரசனையை’ வெளிப்படுத்தும் விதமாக கருத்து பதிவிட்ட சிஎஸ்கே அணியின் டாக்டர் மது தோட்டப்பிலில் என்பவரை நீக்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம்.
இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் சிஎஸ்கே கூறும்போது, “டாக்டர் மது தோட்டப்பிலிலின் தனிப்பட்ட ட்வீட் பற்றி சிஎஸ்கேவுக்கு தெரியவில்லை. பிறகு தெரியவந்ததையடுத்து அணி டாக்டர் என்ற பொறுப்பிலிருந்து அவரை நீக்குகிறோம்” என்று பதிவிட்டுள்ளது.
மேலும், “சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தின் கவனத்துக்கு அவரது ட்வீட் வரவில்லை. அது மட்டமான ரசனையின்பாற்பட்டது” என்று வருத்தம் தெரிவித்துள்ளது.
டாக்டர் தோட்டப்பிலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பம் முதலே மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். ஸ்போர்ட்ஸ் மருத்துவத்தில் அவர் நிபுணர் என்று கருதப்படுகிறது.
20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததையடுத்து மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் கிண்டல் செய்யும் விதமாக அவர் சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்திருந்தார் ஆனால் பிற்பாடு அதனை நீக்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.