முதலில் ராகுல் இடம் உறுதி, பிறகு நானா, தவானா என்பதை முடிவெடுக்கலாம்: ரோஹித் சர்மாவின் பெருந்தன்மை குறித்து ராகுல் நெகிழ்ச்சி

முதலில் ராகுல் இடம் உறுதி, பிறகு நானா, தவானா என்பதை முடிவெடுக்கலாம்: ரோஹித் சர்மாவின் பெருந்தன்மை குறித்து ராகுல் நெகிழ்ச்சி
Updated on
1 min read

இந்திய ஒருநாள், டி20, விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மெனுமான கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா இல்லையென்றால் நான் இல்லை என்ற அளவுக்கு ரோஹித் சர்மா தனக்கு அளித்த ஆதரவை விதந்தோதியுள்ளார்.

தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, ஷிகர் தவண் ஆகியோர் மூலம் கடும் போட்டியை எதிர்கொள்ளும் ராகுல் தன் விக்கெட் கீப்பிங் திறமை மற்றும் தோனியின் இடமான பினிஷிங் இடத்தையும் இப்போது நடுவரிசையில் அலங்கரித்து வருகிறார்.

டி20 கிரிக்கெட்டில் ராகுல் தன் இடத்தை உறுதி செய்து கொண்டதாக ரோஹித் சர்மா சமீபத்தில் தெரிவித்ததையடுத்து ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ராகுல், “ரோஹித்தின் அந்த வார்த்தைகள் என்னை சாதாரணனாக்கியது. அதாவது முதலில் ராகுல் பிறகு நானா, தவானா என்பதை முடிவு செய்யலாம் என்று ரோஹித் கூறினார். இதை என்னால் மறக்க முடியாது.

நான் ரோஹித் சர்மா பேட்டிங்கின் பெரிய விசிறி. அவருடன் சேர்ந்து சில ஆண்டுகள் ஆடிவிட்டேன், அவரைப் பற்றி கூற வேண்டுமெனில் சில கிரிக்கெட் வீரர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள், அதாவது சிலர் சச்சின் டெண்டுல்கர் பேட்டிங்கைப் பார்த்து வாயடைத்துப் போவார்களே அது போன்று ரோஹித் சர்மா பேட்டிங்.

என் மீது ரோஹித் சர்மா அளவுகடந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். ஒரு மூத்த வீரராக அவர் என்னை நிறைய ஆதரிக்கிறார். நிறைய தருணங்களில் அணியில் எனக்காக அவர் பேசியிருக்கிறார், நின்றிருக்கிறார்.

ஒரு வீரர் பொறுப்பை எடுத்துக் கொள்வர், மூத்த வீரர்களுள் ஒருவராகத் திகழ்வார் என்று மூத்த வீரர்கள் இளம் வீரர் ஒருவர் மீது நம்பிக்கை வைக்கும் போது அதுவும் சீராக ஆடாத ஒரு வீரருக்கு இத்தகைய ஆதரவு அளிக்கும் போது அது நிறைய நம்பிக்கையை அளிக்கிறது.

என்னுடைய இப்போதைய சீரான ஆட்டங்களெல்லாம் 2019க்குப் பிறகு நான் எப்படி வித்தியாசமாக மாறினேன் என்பதினால் உருவானதே.

நான் எனக்காக சுயநலமாக ஆடும் போது தோல்வியடைந்தேன், அணிக்காக ஆட முடிவெடுத்த போது எல்லாம் கை கூடிவருகிறது” என்றார் கே.எல்.ராகுல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in