

மிகுந்த அதிர்ச்சி மற்றும் நம்ப முடியவில்லை எனவும் சுஷாந்த் சிங் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் அணியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அண்ட்டோல்ட் ஸ்டோரி' (MS Dhoni: The Untold Story) திரைப்படம் இவரை மொழிகள் தாண்டி பிரபலமாக்கியது.
இந்தப் படத்துக்காக தோனியுடனே பயணித்து அவரது உடல் அசைவுகள், பேட்டிங் முறை, விக்கெட் கீப்பிங் முறை என கற்றுக் கொண்டு 'எம்.எஸ்.தோனி' படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்துக்கான பயிற்சியில் இந்திய அணியினர் அனைவருடனும் பேசும் வாய்ப்பைப் பெற்றார். ஆகையால், இந்திய அணியினர் பலருக்கும் நண்பராகவே வலம் வந்தார்.
சுஷாந்த் சிங்கின் மறைவு இந்திய அணியினரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய மறைவுக்கு இந்திய அணியினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவற்றின் தொகுப்பு:
சச்சின்: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் பற்றிக் கேள்விப்பட்டு அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்திருக்கிறேன். அவ்வளவு இளமையான, திறமையான நடிகர். அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆன்மா சாந்தியடையட்டும்
சேவாக்: வாழ்க்கை மென்மையானது. ஒருவர் என்னவெல்லாம் அனுபவித்து வருகிறார் என்பது நமக்குத் தெரியாது. எல்லோரிடமும் கனிவாக இருங்கள். #சுஷாந்த்சிங்ராஜ்புத். ஓம் சாந்தி.
விராட் கோலி: சுஷாந்த் சிங் ராஜ்புத் பற்றிக் கேள்விப்பட்டு அதிர்ச்சியில் இருக்கிறேன். இதை ஏற்க மிகக் கடினமாக இருக்கிறது. அவர் ஆன்மா சாந்தியடையட்டும். கடவுள் அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் இந்த இழப்பைத் தாங்கும் வலிமையைத் தரட்டும்.
ரோஹித் சர்மா: இது கவலையைத் தருகிறது. இது நடந்திருக்கிறது என்பதை ஏற்க முடியவில்லை. அற்புதமான நடிகர், ஆன்மா சாந்தியடையட்டும் என் சகோதரா.
ரஹானே: உண்மையிலேயே அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. அவர் ஆன்மா சாந்தியடையட்டும். #சுஷாந்த் சிங் ராஜ்புத்
முகமது கைஃப்: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் பற்றி செய்தி கேள்விப்பட்டு முற்றிலும் அதிர்ச்சியும், திகைப்பும் அடைந்தேன். ஒருவர் என்ன நிலையில் இருக்கிறார் என்பதை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடிவதில்லை.
சுரேஷ் ரெய்னா: சுஷாந்த் சிங் ராஜ்புத் பற்றிக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். மஹியின் பயோபிக் திரைப்படத்துக்காக எங்களுடன் நேரம் செலவிட்டார். அப்போது அவரை சில முறை சந்தித்திருக்கிறேன். நாம் ஒரு அழகான, என்றும் புன்னகையுடன் இருக்கும் நடிகரை இழந்துவிட்டோம். ஓம் சாந்தி.
ஹர்பஜன் சிங்: இந்தச் செய்தி பொய் என்று சொல்லுங்கள். சுஷாந்த் சிங் ராஜ்புத் இல்லை என்பதை நம்ப முடியவில்லை. அவரது குடும்பத்துக்கு எனது அனுதாபங்கள். துயரமான விஷயம்.
ஷிகர் தவண்: மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளேன். இதை நம்ப முடியவில்லை. அவரது குடும்பத்துக்கு எனது அனுதாபங்கள் மற்றும் பிரார்த்தனைகள். ஆன்மா சாந்தியடையட்டும். அவர் ஆன்மாவை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.