

ஷாகித் அப்ரிடி கரோனாவிலிருந்து விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடிக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் பாகிஸ்தானில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் அப்ரிடி தொடர்ந்து விளைாயடி வருகிறார். தொண்டு நிறுவனம் நடத்தி வரும் அப்ரிடி கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை தனது அமைப்பு மூலம் அளித்து வருகிறார்.
இந்நிலையில் அப்ரிடிக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில், தான் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தார்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் எம்.பி.யுமான கவுதம் கம்பீர், அப்ரிடி விரைவில் கரோனாவிலிருந்து குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவுதம் கம்பீர் கூறும்போது, “கரோனா வைரஸால் யாரும் பாதிக்கப்படக் கூடாது. அரசியல் ரீதியாக அப்ரிடியுடன் கருத்து வேறுபாடு உள்ளது. கரோனா வைரஸிலிருந்து அவர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.