

ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு 4 ஆண்டுகள் தடையும், கடந்த 2019-ம் ஆண்டு ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் வென்ற தங்கப்பதக்கத்தையும் பறித்து ஏஐயு அறிவித்துள்ளது.
இதன்படி கோமதி மாரிமுத்து 2023-ம் ஆண்டு மே மாதம் வரை எந்தவிதமான தடகளப் போட்டியிலும் பங்கேற்க முடியாது, கடந்த ஆண்டு இரு மாதங்களிலிருந்து அனைத்து விதமான போட்டிகளிலும் பங்கேற்பதிலிருந்தும் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கத்தாரின் தோஹா நகரில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து 800 மீ்ட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் எனும் பெருமையை கோமதி மாரிமுத்து பெற்றார்
ஆனால் கோமதி மாரிமுத்துவுக்கு நடத்தப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில் அவர் அனபாலிக் ஸ்டீராய்ட் நான்ட்ரோலன் மருந்து எடுத்தது கண்டுபடிக்கப்பட்டது. இருப்பினும் கோமதி மாரிமுத்துவிடம் பி மாதிகள் எடுக்கப்படாததால் எந்த தடையும் விதிக்கப்படவில்லை.
இந்நிலையில் கோமதி மாரிமுத்துவிடம் எடுக்கப்பட்ட பி மாதிரியிலும் அவர் ஸ்டெராய்ட் நான்ட்ரோலின் மருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
மேலும், கோமதி மாரிமுத்து ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் ஊக்க மருந்து சோதனை எடுப்பதற்கு முன், இந்தியாவில் நடத்தப்பட்ட 3 பரிசோதனையிலும் அவருக்கு பாஸிட்டிவ் இருந்தது தெரியவந்தது. அதன்பின்புதான் ஆசிய தடகளத்தில் பங்கேற்று அவர் பதக்கம் வென்றுள்ளார் .
இதன்படி கோமதி மாரிமுத்து கடந்த 2019- மார்ச் 18 முதல் மே 17-ம் தேதி வரை பங்கேற்ற அனைத்துப் போட்டிகளின் முடிவுகளும் ரத்து செய்யப்பட்டது. மேலும், கோமதி மாரிமுத்து தமிழகம் சார்பில் பெற்ற பதக்கங்கள், ரேங்கிங் பெற்ற பரிசுகள், பணமுடிப்பு அனைத்தும் திரும்பப்பெறப்பட உள்ளது
தற்போது ஏஐயு விதித்த தடைக்கு எதிராக கோமதி மாரிமுத்து விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி உண்டு.