இந்திய அணியின் ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடர் ரத்து: பிசிசிஐ அறிவிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் அணி வரும் ஆகஸ்ட் மாதம் ஜிம்பாப்வே பயணம் செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், கரோனா வைரஸ் அச்சம் காரணமாக அந்தத் தொடர் ரத்து செய்யப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று அறிவித்துள்ளது.

ஏற்கெனவே இந்திய அணி ஜூன்-ஜூலை மாதம் இலங்கை சென்று விளையாட இருந்த தொடரும் கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இப்போது ஜிம்பாப்வே தொடரும் ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

''இந்திய கிரிக்கெட் அணி திட்டமிட்டபடி ஜூன் 24 முதல் இலங்கையில் பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகளில் விளையாட முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதேபோல, ஆகஸ்ட் 22-ம் தேதி ஜிம்பாப்வே சென்று ஒருநாள் மற்றும் டி20 போட்டித்தொடரில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக இரு நாட்டு அணிகளுடனும் இந்திய அணி விளையாடும் தொடர் ரத்து செய்யப்படுகிறது.

வெளியில் வந்து பயிற்சி எடுப்பதற்கான பாதுகாப்பான சூழல் வந்தபின் பிசிசிஐ ஒப்பந்தத்தில் உள்ள வீரர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும். சர்வதேச கிரிக்கெட் சூழல் தொடங்குவதை அடிப்படையாக வைத்து உள்நாட்டு கிரிக்கெட் தொடரும்.

இந்தியப் பயணமும் முடிவாகும். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயற்சி எடுத்து வரும்போது அதைக் குலைக்கும் வகையில் எந்த விதமான முயற்சிகளையும், முடிவுகளையும் அவசர கதியில் பிசிசிஐ எடுக்காது.

சூழல்களைத் தொடர்ந்து பிசிசிஐ கவனித்து வருகிறது. மாறும் சூழல்களுக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும்''.

இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி மார்ச் மாதத்துக்குப் பின் எந்தவிதமான பயிற்சியிலும் ஈடுபடவில்லை. ஜூலை மாதம் வரை பயிற்சியில் ஈடுபடுவதற்கு சாத்தியம் இல்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு இந்திய அணி பயிற்சிக்கு வந்தால் குறைந்தபட்சம் 6 வாரங்கள் பயிற்சி செய்தால்தான் சர்வதேச அளவில் அடுத்து செல்ல உதவியாக அமையும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in