

பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்த வாய்ப்பிருப்பதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் பாகிஸ்தானுக்குத்தான் ஆசியக் கோப்பை போட்டிகளை நடத்தும் உரிமை வழங்கப்பட்டிருந்தது, ஆனால் கரோனா பாதிப்பு, இந்திய அணி பாகிஸ்தானில் நடந்தால் செல்ல வாய்ப்பில்லை உள்ளிட்ட காரணங்கள் விவாதிக்கப்பட்டு இந்த ஆண்டு இலங்கையில் நடத்த பாகிஸ்தான் சம்மதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2022 ஆசியக் கோப்பை இலங்கையில் நடைபெறவிருந்தது தற்போது பாகிஸ்தானுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்த மாத இறுதியில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் திட்டமிட்டபடி ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்குமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை, காரணம் கரோனா பெருந்தொற்று காரணமாக போட்டிகளை நடத்துவதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.
2010- முதல் இந்தியா ஆசியக் கோப்பை போட்டிகளை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 9ம் தேதி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நடந்தது, காலப்போக்கில் ஆசியக் கோப்பை 2020 குறித்த முடிவு அறிவிக்கப்படும் என்று அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இந்திய அணிதான் கடந்த ஆசியக் கோப்பை சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் இலங்கை தொடர் தள்ளிவைக்கப்பட்டது, காரணம் கரோனா வைரஸினால் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடைகளே. இலங்கையில் இந்த மாதக் கடைசியில் இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் ஆடுவதாக இருந்தது.